தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை எனறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவக் கல்வியாளர்கள் தங்களது கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் உள்ள 15 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்களுக்கு நடைபெறும் பயிலரங்கை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தின் தலைவர் அருணா வி. வணிகர் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழகத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் இருந்த 6 பேரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளது.

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிகுறி இருந்தால் அதனை பரிசோதிக்க புனே ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இனி இல்லை. மாதிரிகள் சென்னை கிண்டி கிங்க்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளபடும்.

ஈரோடு கருமுட்டை விவகாரம் மருத்துவமனைக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளதால் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குரங்கு அம்மை நோய் பாதிப்பால் தான் உயிரிழந்துள்ளாரா என்பது ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE