தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் இழப்பை சந்திக்கும் விவசாயிகள்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர், ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி பயிரிடப்படுகிறது.

தற்போது அனைத்து பகுதி களில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட தக்காளி சந்தைக்கு அதிக அளவில் வருகிறது. விவசாயிகளின் வசதிக்காக அய்யலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழநி என அந்தந்த பகுதிகளிலேயே தக்காளி மொத்த மார்க்கெட் இயங்கி வருகிறது.

தேவை குறைவாக இருப்ப தால் வியாபாரிகள் மொத்த மார்க்கெட்டில் இருந்து குறைந்த அளவு தக்காளி வாங்கிச் செல் கின்றனர். இதனால் தக்காளி விற்பனை தேக்கமடைந்துள்ளது.

வரத்து அதிகம் காரணமாக விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி நேற்று ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையானது. அதாவது ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் அதிகபட்சமாக ரூ.5-க்கு விற்பனையானது. இதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கூறியதாவது:

அறுவடை கூலி, போக்குவரத்து செலவு, சுங்கக் கட்டணம் என அனைத்து செலவுகளையும் பார்த்தால் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடலாம் என்ற நிலைதான் உள்ளது. அவ்வாறு செய்தால் செடிக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே செடியை பாதுகாக்க தக்காளிகளை பறிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் வேறு வழியின்றி சந்தைக்கு கொண்டு வருகிறோம்.

விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளி ரூ.4, 5 என வாங்கினால் எங்கள் கையில் இருக்கும் காசை கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு மேல் விற்றபோது நல்ல விலை கிடைத்தது. தற்போது தக்காளியை விளைவிக்க செலவிட்ட தொகையைக்கூட எடுக்க முடியவில்லை என்றனர். வியாபாரிகள் கூறுகையில், மழை அதிகம் பெய்து தக்காளி செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத் தும்பட்சத்தில் வரத்து குறைந்து விலை அதிகரிக்கும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE