அரசு மருத்துவமனையில் 6 மாதங்களில் 638 பேருக்கு நாய்க்கடிக்கு சிகிச்சை: தீர்வுக்கு கோவை நிர்வாகம் புதுத்திட்டம்

By க.சக்திவேல்

தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய போதிய வசதிகள் இல்லாததால் கோவை மாநகராட்சி பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும், நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 638 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: ரேபிஸ் பாதிப்புள்ள நாய் கடித்தால் ஏற்படும் நோய்க்கு சிகிச்சை இல்லை. ரேபிஸ் பாதிப்பு வந்தால் உயிரிழப்பை தவிர்க்க முடியாது. நாய் கடித்தபிறகு ஒன்றும் ஆகவில்லை என சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

3 முதல் 5 ஆண்டுகள் கழித்துதான் அதன் தாக்கம் தெரியவரும். அப்போது எதுவும் செய்ய முடியாது. எனவே, நாய் கடித்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்தை சுத்தமாக கழுவ வேண்டும். மஞ்சள் பொடி, காபி பொடி போன்றவற்றை காயம்பட்ட இடத்தின்மேல் தடவக்கூடாது.

ரேபிஸ் தடுப்பூசியை முதல்நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், பதிநான்காம் நாள், இருபத்தி எட்டாம் நாள் என 5 முறை செலுத்த வேண்டும். நாய் கடித்ததில் பலத்த காயமடைந்தவர்கள், ரத்தக் காயம் ஏற்பட்டவர்களுக்கு ‘ரேபிஸ் இம்யுனோகுளோபுளின்’ ஊசி செலுத்தப்படுகிறது. நாய் கடித்த 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

நாய்க்கு ரேபிஸ் இருந்து, அந்த நாயின் உமிழ்நீர் உடலில் உள்ள காயம், வெட்டுக் காயத்தில்பட்டால், அதன் மூலமும் மனிதர்களுக்கு ரேபிஸ் பரவும். கோவையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடிக்கான தடுப்பூசி உள்ளது. குழந்தைகளை நாய் கடித்துவிட்டது, பிராண்டியது என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த கோவையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவினர், அதிகப்படியான நாய்கள் உள்ள இடங்களில் இருந்து நாய்களை பிடித்துச் சென்று கருத்தடை செய்து வருகின்றனர். குறிப்பாக கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் அந்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியுடன், விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்துடன் (எஸ்பிசிஏ) இணைந்து, கால்நடை மருத்துவமனையை உருவாக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்.

இம்மருத்துவமனை அமைந்தால், ஒரே நாளில் 100 நாய்களுக்கு கருத்தடை செய்யமுடியும். அதுவே நிரந்தர தீர்வாக அமையும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் நோய்வாய்பட்டாலோ, வயதானாலோ அவற்றை சிலர் தெருவில் விட்டுவிடுகின்றனர். அதுபோன்ற நாய்களை பராமரிக்கவும் அந்த மருத்துவமனையில் வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE