ஜிஎஸ்டி இழப்பீடு | நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்: சு.வெங்கடேசன்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான மத்திய நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கேடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ள கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துள்ளார். இந்த பதிலில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான மத்திய நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன். அதில் ஜிஎஸ்டி விகிதங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன? மாநிலங்களுக்கு நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எவ்வளவு? மாநில அரசுகள் இந்த இழப்பீடு முறைமை நீடிக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்த விவரங்கள் என்ன? சிஜிஎஸ்டி : எஸ்ஜிஎஸ்டி பகிர்வு விகிதத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுமா? ஆகியன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தேன்.

இதற்கு நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ளார். அதில், "47 வது ஜிஎஸ்டி கவுன்சில் வரி விதிப்பில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் பற்றி அவர் விவரித்துள்ளார். அவை எல்லாம் ஏற்கெனவே மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருப்பவைதான். அது போல மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு நிலுவையாக 30.06.2022 அன்று உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ 35,266 கோடிகள். அதில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவை ரூ 2493 கோடி. புதுச்சேரி நிலுவை ரூ 146 கோடி.

இவை எல்லாம் விவரங்கள். ஐந்தாண்டுகளாக இழப்பீடு முறைமை நடைமுறையில் இருந்தாலும் அத் தொகைகளை பெறுவதற்கே மாநிலங்கள் போராட வேண்டி இருந்தது. தற்போது 30.06.2022 உடன் அம் முறைமை முடிவுக்கு வந்து விடும் என்ற நிலையில்தான் மாநிலங்களின் குரல் "நீட்டிப்பு வேண்டும்" என கவுன்சில் கூட்டத்தில் ஓங்கி ஒலித்தன. இதில் பா.ஜ.க ஆளும் மாநில குரல்களும் இருந்தன. ஆனாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இப்போதைய பதிலில் ஐந்து அம்சங்கள் மிக முக்கியமானவை.

ஒன்று, அரசியல் சாசனத்தின் 102 வது திருத்த சட்டம் 2016, பிரிவு 18 ன் படி ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே இழப்பீடு நீடிக்கும் என்று இருக்கிற நிலையை அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார். இதன் பொருள் எத்தனை மாநிலங்களின் குரல் எவ்வளவு உரக்க கேட்டாலும் எங்கள் செவிகள் கார்ப்பரேட்டுகளின் தனிச் சேவைக்கு மட்டுமே என்கிறார்கள்.

இரண்டாவது, இந்த இழப்பீடுக்காக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீடுக்கான செஸ் வரி வசூல் தொடரும், அது பழைய பாக்கிகளுக்காகவும், கடந்த கால இழப்பீடு தொகைக்காக மத்திய அரசு பட்டுள்ள கடன்களை திரும்பச் செலுத்தவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் பொருள் மக்களிடம் செஸ் வசூல் தொடரும், ஆனால் அது மாநிலங்களுக்கு இனி போகாது என்பதே.

மூன்றாவது, எந்தெந்த மாநிலங்கள் இழப்பீடு முறை நீட்டிக்கப்பட வேண்டும் அல்லது வேண்டியதில்லை என்று கேடகப்பட்டதற்கு "சில" மாநிலங்கள் நீட்டிப்பு கேட்டன என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு கூட எத்தனை மாநிலங்கள் என்ன நிலை எடுத்தன என்பதை தெரிவிக்க மாட்டார்கள் என்றால் அது என்ன ஜனநாயகம். கூட்டாட்சி உணர்வை புறக்கணிக்கிறோம் என்று அம்பலப்பட்டு விடுவோம் என்பதாலா?

நான்காவது, ஜிஎஸ்டி வசூல் அமோகமாக இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஜூலை மாதத்தில் 1.45 லட்சம் கோடிகளை தொட்டு ஆண்டு உயர்வு விகிதம் 56 % ஆக இருக்கிறது. மாநில அரசுகளுக்கு வருகிற வருவாயில் இந்த இழப்பீடு பெரும் பங்காக இருக்குமா? என்று கேட்டதற்கு "இல்லை" என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒரு பக்கம் மத்திய அரசின் வசூல் வேட்டை அமோகம். இன்னொரு பக்கமோ, மாநில அரசுகளுக்கு "இழப்பீடு நீட்டிப்பு" மறுப்பு.

ஐந்தாவது, சில மாநிலங்கள் சிஜிஎஸ்டி : எஸ்ஜிஎஸ்டி பகிர்வு விகிதம் மாற்றப்பட வேண்டும் என்ற மாற்று ஆலோசனைகளையும் வைத்தன எனபது செய்திகள். அது குறித்த நேர்மறை அணுகுமுறை மத்திய அரசிடம் என்ற எனது கேள்விக்கு "இல்லை" என்று ஒரு வரி பதில். மத்திய கல்லாவில் குவிப்பதற்கு மட்டும் ஓராயிரம் வரிகளைப் போடுகிற மத்திய அரசு மாநிலங்களின் குரலுக்கு மட்டும் "இல்லை" என்று ஒரு வரியில் பதில் சொல்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் விரோதமானது. இதற்கு எதிராக மாநிலங்களின் குரல் ஓங்கி முழங்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்