'நீலகிரி மக்களுக்காக போராடுவேன்' - அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் பேச்சு

By ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரி: ''நீலகிரி மக்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும்'' என்று புதியதாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எம்.பாரதியார் தெரிவித்தார்.

அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட செயலாளராக வெலிங்டன் கன்டோன்மெண்ட் துணை தலைவர் எம்.பாரதியார் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு ஏற்றுக்கொண்ட பாரதியார் தனது ஆதரவாளர்களுடன் இன்று கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் பேசும் போது, ''நீலகிரி மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராடுவேன். முதற்கட்டமாக கோத்தகிரியில் மார்க்கெட் அருகில் உழவர் சந்தை அமையவுள்ளதால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால், உழவர் சந்தையை வேறு இடத்துக்கும் மாற்ற வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்துவேன். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார்.

நிகழ்ச்சியில், கூடலூர் முன்னாள் நகர செயலாளர் சக்திவேல், கோத்தகிரி ராமு, குன்னூர் முன்னாள் கவுன்சிலர் கபில், கன்டோன்மெண்ட் உறுப்பினர் மேரி ஷீபா மற்றும் பலர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்ட அதிமுகவில் தற்போதைய மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத்துக்கு எதிரானவர்களை ஒன்று திரட்ட பாரதியார் களமிறங்கியுள்ளார். அதிருப்தியாளர்களை தொடர்புகொண்டு தங்கள் அணிக்கு வரை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், மாவட்டத்தில் கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களிலிருந்து பலர் பாரதியாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அரசியல் களம் அமைதியாகவே காணப்படும் நிலையில், தற்போது அதிமுகவில் இரு அணிகள் உறுதியானதால் இனி சூடு பிடிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். திமுக அரசுக்கு எதிராக இரு அணிகளும் ஒன்றை ஒன்று முந்திக்கொள்ள முற்படுவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE