சென்னை: "தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் பொய்ப் பிரச்சாரம் மூலம் கெடுத்திடும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேணாடாம்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்" சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை விடுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காக மாசுக் கட்டுப்பாடு வாரியம், இயக்குவதற்கான இசைவினை (Consent to Operate) வழங்க மறுத்துள்ளது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற அடிப்படை விவரம் கூட – அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை.
பாக்ஸ்கான் நிறுவனத்துடனான தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தொடர்பான உறவு 2006-ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை சிறப்பாக தொடர்ந்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறுவி உள்ளதே அதற்குச் சாட்சியமாக திகழ்கிறது. இத்திட்டங்களால் பெருமளவில் முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கானோருக்கு, குறிப்பாக பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
» கரூரில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் முயற்சி: ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 21 பேர் கைது
» மோகன்லால் இயக்கத்தில் 3டியில் உருவாகும் பரோஸ் - படப்பிடிப்பு நிறைவு
அண்மையில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் இந்தியப் பயணம் மேற்கொண்டபோதும், அவருடன் தமிழ்நாடு அரசின் சார்பில், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பாக்ஸ்கான் நிறுவனம், மின்வாகனம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ள உள்ளதைச் சுட்டிக்காட்டி, அத்திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிடுவதற்கு அழைப்பு விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் என்கிற முறையில், நானும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதினேன். இதற்கு பதிலளிக்கும் வகையில் “மின்வாகன உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் புனரமைப்பு உற்பத்தித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறுவிடப் பரிசீலிப்பதாக” பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகவே, பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் அதே செமி கண்டக்டர் திட்டங்களைத் தனியாகச் செயல்படுத்திட பரிசீலித்து வருகிறது என்பதும்- அதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதுமே உண்மை.
ஒவ்வொரு நாளும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்குடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தனது “உள்கட்சி அரசியல் குழப்பத்தில்” மறந்து விட்டு- தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக இப்படியொரு அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி.
கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது போடப்பட்ட பெரும்பாலான முதலீடுகள் தொழில் முதலீடுகளே அல்ல. கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனம் தொடர்பான திட்டங்களும்தான் மேற்கொள்ளப்பட்டன. தொழில் திட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால், அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 1.50 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இவற்றிலும் பல திட்டங்கள் பெயரளவில் “விளம்பரத்திற்காக” போடப்பட்டவையாகவே உள்ளன. செயல்பாட்டிற்கு வந்த திட்டங்கள் மிக மிக குறைவு.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டு காலத்திலேயே, 2,02,220 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 192 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020-21ஆம் ஆண்டைப் போல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அத்திட்டங்கள், செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் வழங்கிய அறிவுறுத்தலுக்கேற்ப, தொழில்துறை மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதற்காக, அனைத்து சேவைகளையும், முதலீட்டாளர்களுக்குக் அரசு அளித்து வருகிறது. இதன் பொருட்டு, பல திட்டங்கள் தற்போது துவக்கி வைக்கப்பட்டும், அடிக்கல் நாட்டப்பட்டும் வருகின்றன.
முன்பு போல இல்லாமல், மாநிலம் முழுவதும் பரவலாகவும் சீராகவும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் பின்தங்கிய மாவட்டங்களிலும் பெருமளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டிலேயே முதன்முறையாக, தூத்துக்குடியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1,150 ஏக்கரில் அமையவுள்ள பன்னாட்டு அறைக்கலன் பூங்கா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் முதற்கட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நேரில் வந்து அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறது. உலக நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் இன்றைக்கு தமிழகத்தின்பால் திரும்பி உள்ளது.
பெரும் முதலீடுகளை ஈர்த்து, தமிழக முதல்வர் நிர்ணயித்துள்ள லட்சிய இலக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்திட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது மட்டுமின்றி, அதற்கான திசையில் வேகமாக பயணித்து வருகிறது.
தொழில் தொடங்க வருவோரிடம் அதிமுக ஆட்சியில் அதுவும் எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போதிருந்த “கலாச்சாரத்தை” மனதில் வைத்துக் கொண்டு எங்கள் முதல்வரின் நேர்மையான ஆட்சி மீது கல்லெறிய வேண்டாம் என்றும், தொழில் வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் இந்த அரசின் நோக்கத்திற்கு எதிராக “பொய் பிரச்சாரத்தில்” ஈடுபட்டு- தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம் என்று பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago