அரசுப் பள்ளிகளில் நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவா?

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் (ஆகஸ்ட் 1), தங்களது வருகைப்பதிவை கல்வித்துறை செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல், மாணவர்களின் வருகையையும் செயலி மூலமே பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் கடந்த 15 மற்றும் 16-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்கள் பள்ளியில் வழக்கமான வருகைப் பதிவேட்டில் தங்களது வருகையைப் பதிவு செய்யக்கூடாது. கல்வித்துறை செயலி மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மாணவர்களின் வருகைப்பதிவையும் செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களும், 80 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் இருக்கின்ற சூழலில், செயலியில் வருகைப்பதிவு செய்வது சாத்தியம் இல்லை என்றும், ஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதும் என்று ஆசிரியர்கள் பலர் குற்றம்சாட்டுவதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE