புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் சாய்ந்து விபத்து: 5 பேர் காயம், பொதுமக்கள் அதிர்ச்சி

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் இன்று (ஜூலை31) நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் மிகவும் பழமையான பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பழமையான, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலானது கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், முக்கிய திருவிழாவான தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.

இத்தேரின் முன்னும், பின்னும் சப்பரங்களில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் சுவாமிகளும் எழுந்தருளல் செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். கோயிலை சுற்றி தேரோடும் வீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் வலம்வர வேண்டிய நிலையில், தேரிழுக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிரகதாம்பாள் வீற்றிருந்த தேரானது முன்புறமாக சாய்ந்தது.

திடீரென தேர் சாய்ந்ததில் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். உடனடியாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பக்தர்கள் சாய்ந்திருந்த தேரைம் பிரித்து அகற்றி இடிபாடுகளுக்குள் சிக்கிய பக்தர்கள் 5 பேரை உடனடியாக மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் அம்மன் சிலையானது சேதமின்றி மீட்கப்பட்டு கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து சப்பரங்களில் வைத்திருந்த சுவாமி சிலைகளும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த விபத்து குறித்து ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ வை.முத்துராஜா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஓடாமல் இருந்து தற்போது இயக்கப்பட்ட இந்த தேரானது முறையாக பராமரிக்காமல் இயக்கப்பட்டதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து கவனக்குறைவாக இருந்த அலுவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE