கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக நூதன மோசடி: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் பணிகள் காலியாக உள்ளதாகவும், மேற்படி காலிப் பணியிடங்களுக்கு ஒரு செயலி மூலம் ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதற்கு நேர்காணல் நடப்பதாகவும், இந்தப் பணிக்காக வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனவும் தகவல் பரவி வருகிறது. குறிப்பிட்ட மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது.

இந்த தகவலை நம்பி யாரிடமும் பணத்தையோ அல்லது உடைமைகளையோ கொடுத்து ஏமாற வேண்டாம். கூட்டுறவு நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக, அத்துறையின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற மோசடி கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற செயலிகள் மூலம் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE