22 கோடி பேருக்கு வேலை இல்லை என்பதா? - யெச்சூரிக்கு பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் 22.05 கோடி பேருக்கு வேலையே இல்லை என்பது போன்ற மாயையை சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் உருவாக்க நினைப்பது மோசடி வேலை என்று தமிழக பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், பணி கிடைத்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது. இதை சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘கடந்த 7 ஆண்டுகளில் வேலைக்காக விண்ணப்பித்தோர் 22.05 கோடி பேர். ஆனால், வேலை கிடைத்ததோ 7.20 லட்சம் பேருக்கு மட்டுமே. இளைய தலைமுறையினரின் வாழ்வை, திறமையற்ற மோடி அரசு அழிக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து, தமிழக பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சீதாராம் யெச்சூரி கூறுவதுபோல, மத்திய அரசு பணிகளுக்கு 22.05 கோடி பேர் விண்ணப்பிக்கவில்லை. அது விண்ணப்பங்களின் எண்ணிக்கைதான். அவர் மேற்கோள் காட்டிய செய்தியிலேயே இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் 93 துறைகள் உள்ளன. ஒரே நபர் பல துறைகளில் பலமுறை விண்ணப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் பலமுறை பல துறைகளில் விண்ணப்பிக்கும் நிலையில், 22 கோடி விண்ணப்பங்கள் என்பது பெரிய எண்ணிக்கை அல்ல.

மேலும், வேலை இல்லாதோர்தான் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதில்லை. அதில் பெரும்பாலானோர் வேறு ஒரு பணியில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஆனால், 22.05 கோடி பேருக்கு வேலையே இல்லை என்பது போன்ற ஒரு மாயையை சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் உருவாக்க நினைப்பது, மக்களை முட்டாளாக கருதி ஏமாற்ற எண்ணும் மோசடி வேலை.

வேலைவாய்ப்பை பெருக்கும் கட்டமைப்பை ஓர் அரசு உருவாக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம், மத்திய அரசு பணியில் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பது அர்த்தமற்ற வாதம். மக்களோடும், பொருளாதாரத்தோடும் தொடர்பின்றி கம்யூனிஸ்ட்கள் காணாமல் போய்விட்டனர் என்பதையே இது உணர்த்துகிறது.

சீதாராம் யெச்சூரியின் கருத்து தவறானது. அரசு, நாடு குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தை விதைக்கும் உள்நோக்கம் கொண்டது. ‘விண்ணப்பங்கள்’ என்பதை ‘நபர்கள்’ என்று குறிப்பிட்டு, பலமான இந்தியாவை பலவீனமான நாடாக சித்தரித்ததற்காக நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE