மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் தமிழகம் - சிறந்த செயல்பாடு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் தமிழகம் மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நன்றாகவே செயல்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று கூறியதாவது:

இந்திய வரலாற்றில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்றது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

ஆக.13 முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ணக் கொடி இயக்கம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவரும் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கடந்த ஜூன்15-ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இதை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

கடற்கரை பாதுகாப்பு தினம்

வரும் செப்டம்பர் 17-ம் தேதி சர்வதேச கடற்கரை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, 75 கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளோம். அன்றைய தினம் 1,300-க்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை மாபெரும் அளவில் தூய்மைப்படுத்த உள்ளோம்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும்.

கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவையில் வழங்கப்பட்ட ஒப்புதலின்படி, 34 ஆயிரம் கிராமங்களுக்கு இணையசேவை (4ஜி) வழங்கப்படும். தமிழகத்தின் 534 கிராமங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால், கடந்த 2019-ல் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்து வருகின்றனர்.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நன்றாகவே செயல்படுத்துகின்றன. இதன்மூலம் மாநிலத்துக்கு சரியான திட்டங்கள் சென்று சேரும்.

மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் வெளிப்படையாகவே நடக்கின்றன. என்எல்சி நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்த நிறுவனப் பணிகளுக்கு எத்தனை தமிழர்கள் விண்ணப்பித்தனர் என்ற கேள்வி உள்ளது. மத்திய அரசு பணியிடங்களுக்கு தமிழக இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீருக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றது. இதை அரசியல் கோணத்துடன் பாகிஸ்தான் பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, சென்னையில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் பொது இயக்குநர் எம்.அண்ணாதுரை, தூர்தர்ஷன் (சென்னை) செய்திப் பிரிவு இயக்குநர் குருபாபு பலராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE