மதுரையில் இடியுடன் பலத்த மழை: மின்னல், மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மதுரையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்தனர்.

மதுரை நகரில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைந்தனர்.

பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டது.

இதேபோல், உசிலம்பட்டி, செக்கானூரணி, பேரையூர், எழுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

4 பேர் மரணம்

மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (45). தனது வீட்டின் ஒரு பகுதியில் மர அறுவை தொழில் செய்து வந்தார். இவரது தொழில்கூடத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் பணிபுரிந்தார். நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது மர அறுவைப் பணியில் முருகேசனும், ஜெகதீசனும் ஈடுபட்டிருந்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்து இறந்து கிடந்தனர்.

அருகிலிருந்தோர் வந்து பார்த்தபோது இருவரும் மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. சுப்பிரமணியபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

திடீர் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற ஒரு ஆணும், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் மயங்கி விழுந்து இறந்து கிடந்தனர். போலீஸார் விசாரணையில், இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

இறந்தவரில் ஒருவர் கனகவேல் காலனியை சேர்ந்த ரத்னகுமார் (40) எனத் தெரிய வந்தது. இறந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE