என்எல்சி.,யில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: என்எல்சி.,யில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா? என மதிமுக தலைவர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், “நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட சிறப்பாக செயற்பட்டு ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று இருக்கின்றது.

தமிழ்நாட்டிற்கும், தென்மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை என்.எல்.சி. நிறுவனம்தான் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது.

என்.எல்.சி. நிறுவனத்தை உருவாக்கிட பெருந்தலைவர் காமராசர் அவர்கள், இப்பகுதி மக்களிடம் நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலங்களை வழங்குமாறு கேட்டபோது, முப்பதுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும், நிலங்களையும் அளித்தனர்.

பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவின் கோவில்கள் என்று வர்ணித்தார். அவரால் தொடங்கி வைக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனத்தில் தங்கள் நிலத்தையும், குடியிருந்த வீடுகளையும் தாரை வார்த்து தந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

அதுவும் முழுமையாக இல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே பணி வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் அளித்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையும் ஒப்பீட்டு அளவில் மிக குறைவானதுதான். இந்நாட்டுக்கு ஒளி வழங்கும் மின்சார உற்பத்திக்காக நெய்வேலி சுற்றுவட்டார மக்கள் தங்கள் துயரங்களை பொருட்படுத்தாமல் சொத்துகளை அளித்தனர்.

தொழில் வளத்தில் பின்தங்கி உள்ள கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கி வருகிறது.

இந்நிலையில்தான் என்.எல்.சி. நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்து, தனியார் மயமாக்க 2002 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டது.

நாடாளுமன்றத்தில் மார்ச் 19, 2002 அன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கக் கூடாது. தமிழர்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தேன். மறுநாள் மார்ச் 20, 2002 அன்று இரவு பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை நேரில் சந்தித்து, என்.எல்.சி.யின் 51 சதவிகித பங்குகளை விற்கக் கூடாது என்று வலியுறுத்தினேன். என்.எல்.சி. அனைத்து தொழிற்சங்கங்களும் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவையும் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் அளித்தேன். என்னுடைய கோரிக்கைக்கு செவிமடுத்த பிரதமர் வாஜ்பாய் , என்.எல்.சி. தனியார் மயமாகாது என்று வாக்குறுதி அளித்தார். 51 விழுக்காடு பங்கு விற்பனையும் ரத்து செய்யப்பட்டது.

என்.எல்.சி. பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என்று நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இந்நிறுவனத்தில் தமிழர்கள் வேலை வாய்ப்புகளை பெற வேண்டும். குறிப்பாக வீடு, நிலம் தந்தவர்கள், கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் இன்று என்.எல்.சி. நிறுவனம், வேலை வாய்ப்புகளில் நேரடியாக வட இந்தியர்களை புகுத்தும் அடாத செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர பணி இடங்களில் 90 விழுக்காடு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்நிலையில்தான் தற்போது நூறு விழுக்காடு பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்.எல்.சி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரை தேர்வு செய்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவருக்குக் கூட தகுதி இல்லை என்று பாஜக அரசு முடிவு செய்துவிட்டதா? இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா? வட மாநில இளைஞர்களை கொண்டு வந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் திணிப்பது நல்லது அல்ல.

இத்தகையப் போக்கு தொழில் அமைதியை குலைத்துவிடும்; என்.எல்.சி. நிறுவனத்தில் படிப்படியாக வடமாநிலத்தவர் வேலை வாய்ப்பில் நிரம்பி வழியும் நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி பொறியாளர்கள் 299 பேருக்கும் ஆகஸ்ட் 1 இல் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதியதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 விழுக்காடு என்.எல்.சி. நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

என்.எல்.சி. நிறுவனம் போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் தமிழர்களை புறக்கணிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்