ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு: 5 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வரவில்லை

By செய்திப்பிரிவு

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பல தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்த வழக்குகளில் ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் 5 ஆண்டுகால மக்களவை உறுப்பி னர் பதவியும் விரைவில் முடியப் போகிறது. எனினும் அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.

2009 தேர்தலில் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன்தான், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தேர்தலில் பல முறைகேடுகளை செய்தே ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆகவே அவரது வெற்றியை செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கண்ணப்பன் கோரியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை 140 தடவைக்கும் மேல் விசாரணைக்காக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்கை, 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86(7)-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் பல தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வராமல் உள்ளன.

ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நீண்டு கொண்டே செல்வதற்கான காரணம் குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் ஆர்.தனபால் ராஜ் கூறுகையில், ‘‘வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் தரப்பிலேயே பலமுறை வாய்தா வாங்குவது தாமதத்துக்கு முக்கிய காரணம் என்றார்.

ராஜ கண்ணப்பன் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ஜி.சரவணகுமாரிடம் கேட்டபோது, “நாங்கள் தேவையற்று வாய்தா வாங்குவதில்லை. எங்கள் மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்று கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை முடியவே 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் பிறகுதான் பிரதான மனு மீது விசாரணை தொடங்கியது. ராஜ கண்ணப்பன் 40 தடவைக்கும் மேல் விசாரணையில் ஆஜராகியுள்ளார். ஆகவே, தாமதத்துக்கு நாங்கள்தான் காரணம் என கூறுவது சரியல்ல” என்றார்.

தேர்தல் மனு மீதான விசாரணையில் சட்ட ரீதியான பல நடைமுறைகளை நிறைவு செய்ய அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், அதனால் 6 மாத காலத்துக்குள் வழக்கை விசாரித்து முடிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்றும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் “6 மாத காலத்துக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து முடிப்பது நடைமுறை சாத்தியமானதுதான்” என்கிறார் இந்திய தேர்தல் ஆணையத்துக்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஆண்டுக் கணக்கில் வழக்கு நீண்டு கொண்டே செல்வதற்கு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மாறி மாறி வாய்தா வாங்குவதுதான் பிரதான காரணம்” என்கிறார்.

இதுபோன்ற வழக்குகளில் மக்களின் நம்பிக்கை குலைந்து போகாமல் இருக்க, சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள கால வரம்புக்குள் வழக்குகள் முடிவுக்கு வர வேண்டும். அதற்கான வழிமுறை கள் வகுக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்