வெள்ளகோவில் அருகே அரசின் திட்டத்துக்கு முன்பாகவே காலை உணவு வழங்கி வரும் அரசுப் பள்ளி

By இரா.கார்த்திகேயன்

திமுக அரசு ஓராண்டு நிறைவை ஒட்டி வெளியிட்ட அறிவிப்பில், மிக முக்கியமான ஒரு திட்டம், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம். முதல்கட்டமாக 1,545 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது என பெருமிதத்துடன் அறிவித்தார் முதல்வர்.

ஆனால், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே சிலம்பக்கவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நடைமுறை, கடந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளன்றே தொடங்கப்பட்டு விட்டது.

கரோனா கட்டுப்பாடு தளர்வுக்குப் பிறகு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், இந்த பள்ளியில் காலை உணவு வழங்கும் நடைமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “குழந்தைகள் நாள்தோறும் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்தமர்வதால், பாடங்களை போதிய அளவில் கவனிக்க முடியாத நிலை இருந்தது. பாடம், விளையாட்டு உட்பட பள்ளி செயல்பாடுகளில் போதிய விருப்பமின்றி இருப்பதைக் கண்டறிந்து, கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று காலை உணவுத் திட்டத்தை தொடங்கினோம். இன்றைக்கு பெற்றோர் மத்தியிலும், சக அரசுப் பள்ளிகளின் மத்தியிலும் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,’’ என்றனர்.

சிலம்பகவுண்டன்வலசு அரசு தொடக்கப்பள்ளி, ஈராசிரியர் பள்ளி.மொத்த மாணவர் எண்ணிக்கை 16 பேர் தான். ஊரின் மக்கள் தொகையும் மிக சொற்ப அளவிலேயே உள்ளது. மேலும், செங்காளிபாளையம், காங்கயம்பாளையம், கண்ணபுரம் என 3 தொடக்கப்பள்ளிகள் அடுத்தடுத்த கிராமங்களில் இருப்பதால், மாணவர்களின் எண்ணிக்கை உயரவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

காலை 6.30 மணிக்கு பள்ளிக்கு வரும் சமையல் பணியாளர்கள் 4 பேர், உணவு தயாரிப்பு பணிகளை நாள்தோறும் காலை 8.45 மணிக்குள் முடித்து விடுகின்றனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, காளான் கிரேவி, குருமா உள்ளிட்டவை காலை சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பள்ளியில் படித்து, உயர்கல்விக்காக ஓலப்பாளையம் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று வரும் ஏழை குழந்தைகளும் இங்கு வந்துசாப்பிட்டு பயனடைந்து செல்கின்றனர். மதியம் 3 மணிக்கு நாள்தோறும் கீரை, பால், சுண்டல் இவற்றில் ஏதேனும் ஒன்றை வழங்குகிறார்கள்.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.பிரபாகர் கூறும்போது, “12 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் சேர்ந்தபோது, மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. தொடர்ந்து 20 பேருக்குள் மட்டுமே மாணவர் எண்ணிக்கை இருந்தது.

இதனால் மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும் காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு ஊரில்உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன், பள்ளிக் குழந்தைகள் தொடர்ந்து பசியின்றி இருக்க வேண்டும் என்ற கனவோடு, ரூ.35 ஆயிரம் மதிப்பில் நிதி திரட்டப்பட்டு சமையல் பாத்திரங்கள் வாங்கப்பட்டன. தன்னார்வலர்கள் மற்றும் ஊர் மக்களின் முழுஒத்துழைப்பும் தான் இத்திட்டம் வெற்றிபெற முக்கியக் காரணம்.

அதேபோல் காலை உணவுத் திட்டத்துக்காக யாரிடமும் பணம்பெறுவதில்லை. ஒரு மாதத்துக்கான வேலைநாட்களின் எண்ணிக்கைக்கேற்ப, தன்னார்வலர்களிடம் சமையல் பொருட்களை வழங்குகிறோம்.

கரோனாவுக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி தொடங்கி, கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து காலை உணவை அனைத்து வேலை நாட்களிலும் வழங்குகிறோம். எங்கள் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஆனால் ஒருவேளை உணவின்றி பள்ளிக்கு வரக்கூடாதுஎன்பதற்காக தொடர்ந்து, தொய்வின்றி இந்த திட்டத்தை நடத்திவருகிறோம். பள்ளி மேலாண்மைக்குழுவும், பெற்றோரும் ஒத்துழைப்பு அளிப்பதால், காலை உணவுத்திட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது,” என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்