“நுழைவுத் தேர்வு ரத்தால் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை உயர்ந்தது” - அண்ணா பல்கலை. விழாவில் சுட்டிக்காட்டிய பொன்முடி

By செய்திப்பிரிவு

சென்னை: “கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதனால், 25,000 ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 77,000 ஆக உயர்ந்தது" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சுட்டிக்காட்டினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியது: "பட்டம் பெறும் நீங்கள் வேலை தேடுபவராக மட்டும் இல்லாமல், வேலை தருகின்ற நிறுவன அதிபர்களாகவும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில், தமிழகம்தான் முதல் இடம். 53 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர். அதிலும் தற்போது ஆண்களைவிட பெண்களே அதிகம் பயில்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில்கூட பதக்கம் பெறுபவர்களில் பெண்களே அதிகம். 56.5 சதவீதம் பெண்கள் பதக்கங்களைப் பெறுகின்றனர். பதக்கம் பெறும் 69 பேரில் 39 பெண்கள், 30 ஆண்கள்.இதுதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிற மாற்றம் வளர்ச்சி.

பெண்களின் உயர் கல்வியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தால், அவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள ஒரே முதல்வர், தமிழக முதல்வர். இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதனால், 25 ஆயிரமாக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 77 ஆயிரமாக உயர்ந்தது" என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE