மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற லட்சியத்திலிருந்து தமிழகம் பின்வாங்க முடியாது: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "மத்திய அரசு நிதியுதவியுடன் மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்பதற்காக மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் லட்சியத்திலிருந்து தமிழகம் பின்வாங்க முடியாது.

மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மாற்று வழிகள் என்னென்ன உள்ளன என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை என்பதால், மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.

அந்த மாவட்டங்களிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருந்தது. 2022-23 ஆம் கல்வியாண்டில் இந்த மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுமா? என்று மாநிலங்களவையில் நான் வினா எழுப்பியிருந்தேன். அதற்கு விடையளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், "பின்தன்கிய மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை ஆகும். தமிழ்நாட்டை இப்போது ஆளும் திமுகவும், முன்பு ஆட்சி செய்த அதிமுகவும் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மட்டுமே மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், மீதமுள்ள 17 மாவட்டங்களிலும் மாநில அரசின் நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது சாத்தியமல்ல.

தமிழ்நாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தேவைப்பட்ட தருணத்தில் நாடு முழுவதும் பின் தங்கிய மாவட்டங்களில் 157 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க முடிவு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகள், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட ஒதுக்கப்படாத நிலையில், மூன்றாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு குறைந்தது 15 கல்லூரிகளை ஒதுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியது.

பாமக வழங்கிய ஆலோசனைப்படி முந்தைய அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு அது போதுமானதல்ல.

மத்திய அரசு நிதியுதவியுடன் மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்பதற்காக மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் லட்சியத்திலிருந்து தமிழகம் பின்வாங்க முடியாது. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மாற்று வழிகள் என்னென்ன உள்ளன என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும்.

மத்திய அரசு மூன்று கட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக அறிவித்த 157 மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை 102 கல்லூரிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட போதிலும் நிலம் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. அவற்றில் பல கல்லூரிகள் 8 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டவை ஆகும். 8 ஆண்டுகளாக அக்கல்லூரிகள் அமைக்கப்படாத நிலையில், அவற்றை தமிழ்நாட்டுக்கு மாற்ற முடியுமா? என்பது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்.

மற்றொருபுறம், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17 கல்லூரிகள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது 6 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகக் கூடிய இலக்கு தான் என்பதால் நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் தலா மூன்று மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் அமைக்க முன்வர வேண்டும். அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், அவற்றுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்