சர்வதேச செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம் - போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார். விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதன்பின், 50 நிமிடங்கள் விமான நிலைய விஐபிக்கள் வரவேற்பறையில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார். பிரதமர் வந்ததும், அவரால் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டு 75 நகரங்களை கடந்து வந்துள்ள ஒலிம்பியாட் ஜோதி, மேடைக்கு எடுத்து வரப்படும். அதைத் தொடர்ந்து, போட்டியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

போட்டியில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாட்டு வீரர்களும் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கலை பண்பாட்டுத்துறை ஏற்பாட்டின் பேரில், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைப்பில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள், சிறப்பு நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இந்தியப் பண்பாடு, கலாச்சாரம், மரபு அடிப்படையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், செஸ் வீரர்கள் பங்கேற்பதால் விழா நடக்கும் பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமர் பாதுகாப்புக்கான வீரர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழக அரங்கம் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக காவல்துறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில், 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள், சிறப்பு பிரிவு போலீஸார், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் படையினர் உள்பட 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தப்படுகின்றனர். பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் இடங்கள், அவர் செல்லும் வழித்தடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் வருகை

நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடக்க விழா இன்று நடந்தாலும், போட்டிகள் அனைத்தும் நாளை (ஜூலை 29) முதல் மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில்தான் நடக்கின்றன. ஆகஸ்ட் 10 வரை போட்டிகள் நடக்கிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள், 3 நாட்களுக்கு முன்பிருந்தே சென்னை வரத் தொடங்கினர். அவர்களை தமிழக விளையாட்டுத் துறையினர் வரவேற்று, தங்கும் விடுதிகளில் தங்கவைத்துள்ளனர்.

கடந்த 25-ம் தேதி பல்வேறு நாடுகளில் இருந்து 65 வீரர்களும் நேற்று முன்தினம் 256 வீரர்களும் வந்தனர். துருக்கி, சவுதி அரேபியா, கிரீஸ், உருகுவே, ஈரான், இத்தாலி, இஸ்ரேல், அயர்லாந்து, எகிப்து, பெல்ஜியம், ஜமைக்கா, கயானா, சைப்ரஸ், பகாமாஸ், ஆஸ்திரியா, வியட்நாம், ஜப்பான், ஹாங்காங், போலந்து, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, இலங்கை, பராகுவே, நார்வே, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஓமன், குவைத், மலேசியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், கியூபா, மொரீஷியஸ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 1,045 வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் முக்கிய சேவைக்கான அலுவலகங்கள் தவிர மற்றவை இயங்காது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கும் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.

சிற்பக்கலை தூண் திறப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை மாமல்லபுரம் சென்ற முதல்வர், நகரின் நுழைவு வாயிலில் தமிழக கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலை தூணை திறந்துவைத்தார். இந்த தூணில் கலைநயம்மிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம், ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, செஸ் போட்டி நடைபெறும் அரங்குக்கு சென்ற முதல்வர், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூருடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார். பின்னர், போட்டியில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுடன் இரவு உணவு அருந்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மெய்யநாதன், தா.மோ.அன்பரசன், மதிவேந்தன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்