‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு, வீடாகச் சென்று ‘மழைச் சோறு’ பெற்றும் விநோத ‘மழைக் கன்னி’ வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர்.
வறட்சிக் காலங்களில் மழை வேண்டி நம் முன்னோர்கள் பல விநோத வழிபாடுகளை மேற்கொண்டனர். அவை காலப்போக்கில் அழிந்து வருகின்றன. இன்றளவும் சில கிராமங்களில் கழுதைக்கு கல்யாணம், அரச மரத்துக்கும், வேம்புவுக்கும் கல்யாணம், யாகம், வேள்வி என பல சடங்குகளையும், வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்திலும் இது போன்ற ஒரு விநோத வழிபாட்டுமுறை நடைமுறையில் உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட குக்கிராமம்.
அங்கு பருவ மழை இல்லாத காலங்களில் ‘மழைக் கன்னி’ வழிபாடு நடத்துவது சடங்காக உள்ளது. முன்பெல்லாம் வாரவழிபாடுகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இப்போது ஓரிரு நாள் வழிபாடாக மாறிவிட்டது என்கின்றனர் ஊர் பெரியவர்கள்.
தமிழகத்தின் தொன்மைவாய்ந்த வளமை வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்வகை வழிபாட்டு முறைகள் படிப்படியாக அழிந்து வருவது குறிப்பிடத் தக்கது.
இந்த வழிபாட்டில் கிராம மக்கள் ஒன்றாக இணைந்து பாடி, வீடு, வீடாகச் சென்று ‘மழைச் சோறு’ பெற்று அதை கோயிலில் வைத்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணும் வழக்கமும் கடைபிடிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய இவ்வழிபாட்டில் பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ‘வெள்ளி தென் திசையில்… வெண்மேகம் வட திசையில்… வெள்ளாமை நம்பி நிற்கும்… வெள்ளாளன் எத்திசையில்… துட்டுக்கு நெல் வாங்கி… தோட்டத்தில் தெளித்து வைத்து…துட்டே சுமையாச்சு… தொடுத்த மழை போயாச்சு…!
மேலி பிடிக்கும் முகம்… முகம்வாடி கிடக்குதே… கலப்பை பிடிக்கும் கை கைசோர்ந்து கிடக்குதே…! காலம் தெளிய வேணும்… காரி மழை பெய்ய வேணும்... ஊர் செழிக்க வேணும்... உத்த மழை பெய்ய வேணும்’ என்ற பாடல் வரிகளை பாடியபடி வீடு, வீடாகச் சென்று மண் கலையங்களில் ‘மழைச் சோறு’ சேகரித்தனர்.
அங்குள்ள விநாயகர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு, சேகரித்த உணவை ஒன்றாக்கி அனைவரும் பகிர்ந்து உண்டனர்.
அங்குள்ள குளத்தோட்டம் என்ற குளக்கரையில் தென்னங் கீற்றைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட தற்காலிக பந்தலில், மண்ணால் செய்யப்பட்ட கன்னிமார் சிலைகள் ‘மழைக் கன்னி’ வழிபாட்டுக்காக தயார் நிலையில் இருந்தன.
தட்டுகளில் மாவிளக்கு ஏந்தி, மழைக் கன்னிக்கு படையலிட பெண்கள், சிறுமியர் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது வயதான பெண்கள், ‘மானத்த நம்பியல்லோ மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு இப்போ மழை பெய்ய வேணும்… மழைக்கு வரம் கேட்டு நாங்க மருகுகிறோம் சாமி’ என்ற பாடலைப் பாடினர்.
மழைக் கன்னி சிலை முன்பாக உடுக்கை இசைத்து பாடிய கலைஞர்கள், ‘மக்கள் மனசு வாடுறத பாத்து… மழையை கொடுப்பாய் கன்னியாத்தா….மத்த உசுரு பசியபாத்து மழையை பொழிவாய் கன்னியாத்தா’... என ராகம் மேலிட பாடல்களைப் பாடினர்.
பின்னர், மண் உருவங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, மாவிளக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர்.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பொன்னுச்சாமி கூறும்போது, ‘இது போன்ற பலவிதமான வழிபாட்டு முறைகள் தமிழகத்தில் உள்ளன. வளமை அல்லது தெளிப்புச் சடங்கு என அழைக்கப்படுகிறது.
பஞ்ச பூதங்களில் ஒன்று குறைந்தாலும், கூடினாலும் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி இதை கட்டுப்படுத்த இது போன்ற கூட்டு வழிபாடு அல்லது பிரார்த்தனை மூலம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
நீர் நிலையை காக்கும் தெய்வமாக ‘கன்னியாத்தாள்’ போற்றப்படுகிறாள். குளத்தின் கரைகளில் இது போன்ற பெண் தெய்வவழிபாடு இருப்பதை காணமுடியும்.
மழையில்லாமல் ஏற்படும் வறுமை நிலையை பாட்டுப் பாடியும், அதனைப் போக்க வீடு, வீடாகச் சென்று யாசகமாக சோறு அல்லது மக்கள் வழங்கும் உணவை அனைவரும் பகிர்ந்து உண்டு, பிரார்த்தனை செய்கின்றனர். இந்த வழிபாடு நடைபெற்ற சில நாட்களிலேயே மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சில நேரங்களில் மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக மழை பெய்துள்ளது’ என்றார்.
இதே கிராமத்தில் ஆண்கள் பங்கேற்ற 1008 தீர்த்தக் குடம் எடுக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago