சென்னை செஸ் ஒலிம்பியாட்: விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற 152 மாணவ, மாணவிகளை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இந்தச் சிறப்பு விமானத்தில் பயணிக்கும் மாணவர்கள் விமானத்திற்குள் செஸ் விளையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பெங்களூரு செல்லும் மாணவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு விமானத்தின் வெளிப்புறத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE