களத்தில் மரணம் அடைந்த கபடி வீரர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: கபடி விளையாடி கொண்டு இருக்கும்போது மரணம் அடைந்த கபடி வீரர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின்போது கபடி வீரர் விமல்ராஜ் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும்போது மரணம் அடைந்தார். இந்நிலையில், மரணம் அடைந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு ரூ,3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் ( 21) என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE