“முதல்வர் பரந்த மனப்பான்மையுடன் விளம்பரங்களில் பிரதமரின் படத்தை சேர்க்க வேண்டும்” - தமிழிசை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “தமிழக முதல்வர் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் நிறுவப்பட்டுள்ள தியாகச் சுவரில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு வருகிறது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வீர சாவர்க்கர் மற்றும் வேலு நாச்சியார் ஆகியோரின் பெயர் கொண்ட கல்வெட்டுகளை தியாகச் சுவரில் பதித்தார். தொடர்ந்து கல்வெட்டை சுற்றி வரையப்பட்டுள்ள விடுதலை போராட்ட வீரர்களின் ஓவியங்களை தமிழிசை பார்வையிட்டார். அவற்றில் வீரர்களின் பெயர்களை பதிவிட வேண்டும் என தமிழிசை அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியது: "தியாகச் சுவர் குழந்தைகளுக்கு தேச உணர்வை ஊட்ட வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். புதுவையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு திட்டங்களை தீட்ட வேண்டும்.

தமிழகத்தில் செஸ் ஒலிம்யாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் வருவது மகிழ்ச்சிக்குரியது. இதில் எனக்கு ஓர் ஆதங்கம் உள்ளது. போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை. இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழக முதல்வரான அண்ணன் ஸ்டாலின், பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

தமிழிசை தன்னிச்சையாக செயல்படுகிறார் என நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளாரே என்று கேட்டதற்கு, "நான் தன்னிச்சையாக செயல்படவில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன். நான் எங்கே பொய் சொன்னேன் என தேடித்தான் பார்க்க வேண்டும். நான் மெய்யாக வேலை செய்கிறேன். தீயாய் வேலை செய்கிறேன். மக்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். அவர் ஏதோ விமர்சனம் செய்வதற்காக பேசுகிறார். முன்னாள் ஆளுநர் கிரண் பேடியை பேய் என்றார். என்னை பொய் என கூறியுள்ளார்.

ஆளுநர் என்றாலே அவர் விமர்சனம் செய்கிறார். இதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இருப்பினும் நாராயணசாமி அண்ணன் தெரிந்து கொண்டு பேச வேண்டும். இது போன்ற விமர்சனங்கள் வேண்டாம். புதுவையில் மகாகவி பாரதியாருக்கு வானுயர சிலை வைக்க சுற்றுலா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது" என்று தமிழிசை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE