பேரையூரில் தனியார் நிலத்தில் கண்டறியப்பட்ட கி.பி.15-ம் நூற்றாண்டை சேர்ந்த குதிரை வீரன் சிற்பம்

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் பேரையூரில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

பேரையூரில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் நிலத்தில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் ஆய்வாளருமான து.முனீஸ்வரன், லட்சுமணமூர்த்தி, ஆதிபெருமாள்சாமி ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம் மற்றும் போர்வீரன் சிற்பமுடைய நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து உதவிப் பேராசிரி யர் து.முனீஸ்வரன் கூறியதா வது: பாண்டிய நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் வணிகப் பாதையிலுள்ள முக்கியமான ஊர் பேரையூர். இவ்வூர் தொடக்கத்தில் கடுங்கோ மங்கலம் என அழைக் கப்பட்டது. இங்கு ஆதிமனிதனின் வாழ்விடம், பாறை ஓவியம், முதுமக்கள் தாழிகள், பாண்டியர் கால கல்வெட்டு, நாயக்கர் கால நடுகற்கள் காணப்படுகின்றன.

மேலும், இங்குள்ள தனியார் நிலத்தில் 6 அடி உயரம், 3 அடி அகலமுடைய நடுகல்லில் குதிரை வீரன் புடைப்புச்சிற்பம் உள்ளது. குதிரை வீரனுக்குப் பின் 3 பெண்கள் வரிசையாக நிற்கின்றனர்.

அதனருகே மற்றொரு 3 அடி உயரம், 2 அடி அகலமுடைய பலகைக் கல்லில் போர் வீரனின் புடைப்புச்சிற்பமும் உள்ளது.

இப்பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரை வீரன், போர் வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தற்போது சில இனக்குழுவினர் குல தெய்வமாக வழிபடுகின்றனர். இந்த நடுகற்கள் கர்நாடகத்தை ஆட்சி செய்த ஹொய்சாளர்களின் கலைப்பாணியில் அமைந்துள்ள தால் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE