ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்: காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இங்கு ஆடிக் கிருத்திகை விழா கடந்த 21-ம் தேதி தொடங்கியது.நேற்றுமுன்தினம் ஆடி பரணி விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று ஆடிக் கிருத்திகை விழா மற்றும் முதல்நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு ஆடிக் கிருத்திகை விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.

பலவித காவடிகள்

இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு படிகள் வழியாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மலர் காவடி, மயில் காவடிகளுடனும், அலகு குத்தியும் பக்திப் பரவசத்துடன் ‘அரோகரா... அரோகரா..’ என கோஷமுடன், மலைக் கோயிலில் முருகப் பெருமானை வழிபட்டனர்.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்குசிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. மேலும், தங்கக் கவசம், பச்சைக்கல் பதித்த வைரமாலை அணி விக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் இருந்து ராஜ அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டு முருகனுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தெப்பத் திருவிழா

இதைத் தொடர்ந்து, தெப்பத் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி, மலைக்கோயில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதராய் தேர் வீதியில் வலம் வந்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆடிக் கிருத்திகையையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், 5 மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார். அதேபோல், ஆந்திர மாநில அமைச்சரும், திரைப்பட நடிகையுமான ரோஜா காவடி எடுத்துக்கொண்டு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருத்தணி நகர் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து 170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும், மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதி களும் செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெயப்பிரியா, கோயில் துணை ஆணையர் விஜயா ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE