போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழக ஊடகங்களில் நாள் தோறும் தவறாமல் இடம் பெறுபவை போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் அவற்றின் சட்ட விரோத விற்பனை குறித்த செய்திகள் தான். தமிழக காவல்துறையும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஓர் இடத்தில் போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுத்து பறிமுதல் செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதை விட 100 மடங்கு போதைப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனையளிக்கும் உண்மை. தமிழகத்தில் பெருகி வரும் போதைக் கலாச்சாரம் குறித்த ஆய்வுகளில் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் அச்சத்தில் உறையவைக்கின்றன.

2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழக சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்த ஆய்வில் 9% மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் இந்த எண்ணிக்கை 10 விழுக்காட்டை தாண்டியிருப்பது உறுதியாகியிருக்கிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக கிடைப்பது தான் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. போதைக்கு அடிமையானவர்களில் 21% மாணவர்கள் தங்களுக்கு போதைப் பொருட்கள் தாராளமாகவும், எளிதாகவும் கிடைப்பதால் தான் அவற்றுக்கு அடிமையானதாக தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1.70 கோடி இருக்கக்கூடும். இவர்களில் 10 விழுக்காட்டினர், அதாவது 17 லட்சம் பேர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர் என்பதும், மூன்றரை லட்சம் பேர் போதைக்கு ஆளாவதற்கு போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது தான் காரணம் என்பதும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயங்கள் இல்லை. போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழகத்தின் எதிர்காலமாக கருதப்படும் இளைஞர் சமுதாயம் பெரும் சுமையாக மாறிவிடக்கூடும். இதை தடுக்க வேண்டும்.

ஆனால், களத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்கு அல்ல... கட்டுப்படுத்துவதற்கு கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த திசம்பர் - ஜனவரி, மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் இரு கட்டங்களாக சோதனைகளை நடத்தி 17,671 பேர் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களை காவல்துறை கைது செய்தது. ஆனாலும் கூட போதைப் பொருட்களின் விற்பனை சிறிதும் குறையவில்லை.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக எவரேனும் கைது செய்யப்பட்டால், அடுத்த நாளே அவருக்கு மாற்றாக இன்னொருவர் அப்பகுதியில் போதைப் பொருள் விற்பனையை தொடங்கி விடுகிறார். கைது செய்யப்பட்டவரும் 15 நாட்களில் விடுதலையாகி வந்து மீண்டும் போதைப் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கி விடுகிறார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதன் மூலமாக மட்டுமே போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனப் பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது. வெளி மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் படிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த அஜய்குமார் என்ற மாணவர் தடை செய்யப்பட்ட போதை ஊசிகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் உயிரிழந்ததார். தமிழகத்தின் கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள்கள் எந்த அளவுக்கு ஊடுருயிருக்கின்றன என்பதை இந்த சோக நிகழ்விலிருந்தே அறியலாம்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களில் பலர் எல்.எஸ்.டி போன்ற போதைப்பொருட்களை மாத்திரை வடிவில் விழுங்கி விட்டு வகுப்பறைகளிலேயே, போதையில் கண்கள் சொருகிய நிலையில் மயங்கியிருக்கும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன. போதைப்பழக்கத்தால் குற்றங்களும் பெருகி விட்டன. அண்மையில் கடலூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்கள் சிலர், தங்களுடன் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது. இதேபோல் ஏராளமான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மாணவர்கள் தொடக்கத்தில் கஞ்சா என்ற போதைப் பொருளுக்குத் தான் அடிமையாகின்றனர். பின்னர் படிப்படியாக அபின், போதை ஊசிகள், கேட்டமைன், எல்.எஸ்.டி (Lysergic Acid Diethylamide -LSD) ஆகியவற்றுக்கு அடிமையாகின்றனர். இந்த வகை போதைப்பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் தாராளமாக கிடைக்கின்றன. அண்மைக்காலமாக கொடிய போதைப் பொருட்கள் மாத்திரைகள் வடிவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. போதைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்குறைந்த வயதிலேயே தங்களின் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், குட்கா எனப்படும் போதைப் பாக்குகள் ஆகியவற்றால் கூட மாணவர்களும், இளைஞர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எனது அறிவுறுத்தலின் பேரில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். இந்தியா முழுவதும் குட்காவை தடை செய்வதற்கான விதிகளை வகுத்தார். அதற்குப் பிறகும் தமிழகத்தில் குட்கா தடை செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அன்புமணி ராமதாஸ் தான் தொடர்ந்து கடிதங்களை எழுதி, தடை செய்ய வைத்தார்.

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தில் குட்காவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. பிற போதைப்பொருட்களின் விற்பனையும் தலைவிரித்து ஆடுவது வேதனையளிக்கிறது. காவல்துறையினர் நினைத்தால், போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு ஒழித்துவிட முடியும். ஆனால், ஏனோ அதை செய்வதற்கு காவல்துறைக்கு மனம் வரவில்லை. தமிழகத்தில் போதைப்பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நமது விலைமதிப்பற்ற செல்வங்களான இளைய தலைமுறையினரை சீரழித்து விடும். அத்தகைய சீரழிவை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்பார். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள போராட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகள், அணிகள் ஆகியவற்றின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்பர். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினரை காப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்