சென்னை வடபழனி, திருப்போரூர், சிறுவாபுரி உட்பட முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா

By செய்திப்பிரிவு

சென்னை வடபழனி முருகன் கோயில், கந்தக்கோட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நேற்று ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

முருகன் கோயில்களில் சித்திரை, மாசி, கார்த்திகை, ஆடிக் கிருத்திகை நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படும். இதன்படி ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வைபவத்தின்போது பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும் வந்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

இந்நிலையில் நேற்று ஆடிக் கிருத்திகை தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி வடபழனி கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். நெரிசல் ஏற்படாமல் இருக்க பல இடங்களில் பந்தல்கள் போடப்பட்டு ரூ.50 மற்றும் ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு சிறப்பு தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டது. கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மகா அபிஷேகம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும் நேற்று ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலையில் 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்டவரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மொட்டை அடித்து, அலகு குத்தி, காவடி எடுத்தனர்.

இந்த ஆடிக் கிருத்திகை விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்று கந்தனை வழிபட்டனர். இரவில் மாட வீதிகளில் சுவாமி உலா வந்தார்.

இதேபோல், சென்னை பாரிமுனையில் உள்ள கந்தக்கோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மடிப்பாக்கம் முருகன் கோயில், சைதாப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோயில் மற்றும் சிவாலயங்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

சந்தனக் காப்பு அலங்காரம்

மேலும் காஞ்சிபுரம் குரமக்கோட்டம் கோயிலில் முருகப் பெருமானுக்கும் உக்கபெரும்பாக்கம் நட்சத்திர விநாயர் கோயிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேதசிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதேபோல் இன்றைய நட்சத்திர அதி தேவதையான அக்னிபகவானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசித்தனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் ராஜகோபுரத்தில் உள்ளமுருகன் சிலைக்கு ஆடிக் கிருத்திகையையொட்டி கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு 25 கிலோ சந்தனத்தில் சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையொட்டி 12 அடி முருகப்பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE