சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி அலுவலக அசல் பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சீல் அகற்றப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கட்சி அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நாளில், தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தை பூட்டிவிட்டு, அனைத்து பணியாளர்களுடன் வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு சென்றுவிட்டார்.
இதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம், 300 அடியாட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, புகழேந்தி, பெரம்பலூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், எம்.எம்.பாபு, கீதா ஆகியோரும் அவருடன் சேர்ந்து, அவ்வை சண்முகம் சாலையில் இருந்த அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியும், மக்களை தாக்கியும், கற்களை வீசியும் அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
அலுவலகம் பூட்டியிருப்பதை பார்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அடியாட்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அலுவலகத்தை சூறையாடி, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
குறிப்பாக, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் உள்ள இடம், கோவையில் உள்ள இதய தெய்வம் மாளிகை, புதுச்சேரி, திருச்சி அலுவலகங்கள், பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை ஆகியவற்றின் அசல் பத்திரங்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் வங்கியில் வைக்கப்பட்டதற்கான அசல் ஆவணங்கள், பீரோவில் வைத்திருந்த ரூ.31 ஆயிரம் பணம், கணக்கு வழக்குகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய 2 கணினி, ஹார்டு டிஸ்க், 37 வாகனங்களின் அசல் பதிவு பத்திரம், தரை தளத்தில் உள்ள அனைத்து அறைகளின் சாவிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
அறை கதவுகள் உடைப்பு
அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தியிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். ஜெயலலிதா அலுவலக அறை, ரசீது போடும் அறை, ‘நமது அம்மா’ அலுவலக அறை, அவைத் தலைவர் அறை, முதல் மாடியில் உள்ள கூட்ட அரங்கு, கணினி அறை, 2-ம் மாடியில் உள்ள நூலக அறை, போட்டோ கேலரி உட்பட அனைத்து அறை கதவுகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
எனவே, ஓபிஎஸ் உள்ளிட்ட மேற்கண்ட 9 பேர் மீதும், உடன் வந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா - ஜானகி இடையிலான பிரச்சினையின்போதுகூட இதே 145-146 விதிகளின்படி கட்சி அலுவலகம் பூட்டப்பட்டது. ஆனால் அப்போதுகூட இதுபோல யாரும் கதவை உடைத்து உள்ளே செல்லவில்லை. அறவழியில்தான் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சி அலுவலகம் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, அங்குள்ள பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. இவை அனைத்தும் காவல் துறை முன்னிலையில், அவர்களது பாதுகாப்பு, முழு ஒத்துழைப்போடுதான் நடந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறையை உடைத்து, ஓபிஎஸ் உள்ளே சென்று அமர்ந்துள்ளார். இதை செய்ய எப்படி அவருக்கு மனது வந்தது, எப்படி தைரியம் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago