செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கான அழைப்பிதழ் இன்னமும் எனக்கு வரவில்லை: ஆளுநர் தமிழிசை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பலருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார்.

சென்னை அருகிலுள்ள மாமல்லபரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதிவரை 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது. இந்த செஸ் பிரச்சார ஜோதி இன்று புதுச்சேரி வந்தடைந்தது.

புதுச்சேரி நுழைவு வாயிலில் மாநில ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நேரு யுவகேந்திரா சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடற்கரை சாலை அருகில் உள்ள காந்தி திடலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடற்கரை சாலையில் என்சிசி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோருடன் ஊர்வலமாக இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்குக்கு கொண்டு வரப்பட்டது. செஸ் ஜோதியை கிராண்ட்மாஸ்டர் ஆகாஷ் குழுவினருடன் இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்குக்கு கொண்டு வந்தார்.

அங்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ அனிபால் கென்னடி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றனர். இதில் அரசு செயலர் (கல்வி) முத்தம்மா, கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: ‘‘வருங்கால இந்தியாவை மேம்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செஸ் போட்டி அதற்கான வழிவகை செய்யும். 186 நாடுகளைச் சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் இந்த சதுரங்கப் போட்டியை தொடங்கி வைக்க வருகிறார் என்பது நமக்கு பெருமை.

இப்போது ஒலிம்பிக் விளைாட்டுகளில் மட்டுமல்ல, பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களும் இந்தியாவில் அதிகம் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

பிரதமர் விளையாட்டு வீரர்களை அழைத்து தேநீர் விருந்து அளிக்கிறார். அவர்கள் வெற்றி பெற்றால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெற்றியைப் பகிர்ந்து கொள்கிறார். நன்றாக விளையாடி பதக்கம் பெறவில்லை என்றாலும் இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்தீர்கள் அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என்று சொல்லுகிறார்.

முன்னர் ஒலிம்பிக் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளில் இந்தியாவின் கொடி உயருமா என்று நாம் பார்த்துக்கொண்டிருந்தோம். இன்று நம் விளையாட்டு வீரர்கள் நமது தேசத்தின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். நமது கலாச்சாரத்தை உலக நாடுகளில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த விளையாட்டுப் போட்டி நமக்கு மிகப்பெரிய வாய்ப்பைத் தரும்.

மாணவர்கள் படிப்புக்கு மேல் ஒரு கலையை, ஒரு விளையாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதையும் போட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளையாட்டு நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. நாம் நன்றாக படித்து சாதனை புரிய வேண்டும் என்பதையும் விளையாட்டு நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. இதைப் போன்ற பல உலக விழாக்கள் இந்தியாவில் நடைபெற வேண்டும். அதற்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரியில் இருந்து புறப்படும் இந்த ஒலிம்பியாட் சுடர் வெற்றிச் சுடராகவே அமையும்.’’என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியது: ‘‘செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பலருக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை. ஆனாலும், தமிழகத்திலும், இந்தியாவிலும் எது நடந்தாலும் எனக்கு பெருமை. நிச்சியமாக அதில் கலந்து கொள்வேன்.

விமானத்தில் சக பயணி மயக்கமடைந்தார். வேறு மருத்துவர்கள் யாரும் இல்லை. நான் உடனே ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி அளித்தேன். ஓர் உயிரை காப்பாற்றியது மன நிறைவைத் தந்தது. நான் இல்லாமல் போயிருந்தால் அவருடைய நிலைமை கொஞ்சம் சங்கடமாகதான் இருந்திருக்கும். அதனால் விமானப் பணி பெண்களுக்கு முதல் உதவி கொடுப்பதில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. மருத்துவப் உபகரணங்களை உடனடியாக எடுத்து சிகிச்சை தரும் வகையில் தயார் நிலையில் வைக்க வேண்டும்’’என்றார். | வாசிக்க > விமானத்தில் மயங்கிய சக பயணி: முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE