நீங்களே வீட்டை அளந்து சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் - சொத்து வரி கணக்கீட்டில் விரைவில் மாற்றம்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: பொதுமக்களே தங்களின் வீட்டை அளிந்து மாநகராட்சிக்கு தெரிவித்து சொத்து வரி கணக்கீடு செய்யும் வகையில் விரைவில் புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் மொத்தம் 12 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துகளுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது. புதிய சொத்து வரி விதிப்பின்படி சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சொத்து வரி மதிப்பீட்டை முறைப்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தொடர்ந்து செய்து வருகிறது.

சென்னை மாநகராட்சியின் ட்ரோன் ஆய்வில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு குறைவான சொத்து வரி விதிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதைப்போன்று இணைக்கப்பட்ட பகுதிகளிலும் குறைவான சொத்து வரியை பலர் செலுத்தி வருகின்றனர். .

இதை சரிசெய்ய புதிதாக அமலுக்கு வரவுள்ள நகர்புற உள்ளாட்சி சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் 2 லட்சம் பேர் குறைவான சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இனி வரும் காலங்களில் பொதுமக்களே தங்களது வீட்டின் அளவை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம்.

ஆதாவது, பொதுமக்கள் எங்களின் வீடு, இந்த மண்டலத்தில், இந்த தெருவில், இவ்வளவு சதுர அடி உள்ளது என்று சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்கும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் சதுர அடியை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு சொத்து வரி விதிக்கப்படும்.

இதன்மூலம் அதிக அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என்ற புகார் குறைய வாய்ப்பு உள்ளது. இதில் யாராது வீட்டின் சதுர அடியை குறைவாக அளித்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புதிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் விதிகள் உருவாக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்" என்று அவர்கள் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE