“என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்” - கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை

By செய்திப்பிரிவு

கடலூர்: “என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்” என்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இறுதிச் சடங்கு, மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் இன்று நடைபெற்றது.

மாணவியின் உடல் நல்லடக்கம் செய்த பின்னர் அவரது தந்தை ராமலிங்கம் கூறியது: “என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும். என் மகளுக்கு ஏற்பட்ட ஆபத்துக்கான தண்டனையை அவர்கள் அனுபவித்தாக வேண்டும். எனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வாங்கி தந்தாக வேண்டும்.

எனது மகள் தற்கொலை செய்யவில்லை, கொலைதான் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளி நிர்வாகம்தான் இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. எனது மகளின் கொலையில் 7 பேர் இருக்கின்றனர் எனது கணிப்பு.

அந்தப் பள்ளியின் விடுதி கண்காணிப்பாளர், ஆசிரியர்கள் இரண்டு, மூன்று பேர், பள்ளி உரிமையாளர்கள் இருவர், அவர்களது மகன்கள் இருவர்... இவர்கள்தான் காரணம். வேறு யாரும் கிடையாது.

சிபிசிஐடி விசாரணையைப் பொறுத்தவரை நன்றாகத்தான் நடக்கும் என்று நினைக்கிறேன். கடவுள் கைவிடமாட்டார் என்று நினைக்கிறேன். விசாரணை முடிவுகள் எனக்கு சாதகமாகதான் வரும் என்று நம்பிக்கை உள்ளது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE