பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றார்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில்பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் டெல்லியில் உள்ள ஓட்டலில் நேற்று மாலை பிரிவுபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்குமாறு அதிமுகவை சேர்ந்த பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று காலைசென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றார். அவர் அங்கு4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாஉள்ளிட்டோரை சந்தித்து அதிமுகவில் நிலவும் குழப்ப நிலை குறித்துஎடுத்துரைக்க உள்ளார். இந்த பிரச்சினையில் அவர்கள் தலையிட்டு உரிய தீர்வு காண உதவுமாறு பழனிசாமி கோர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது, பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்களிடம் தெரிவிக்க பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் வரும் 28-ம் தேதி நடக்கிறது. இதில்பிரதமர் பங்கேற்கிறார். அப்போது, பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே ஒரு சந்திப்பை ஏற்படுத்தி, கட்சியில் சுமுக தீர்வை எட்டஉதவுமாறு பழனிசாமி கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கும் நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க பழனிசாமி திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE