“சூர்யாவுக்கு வாழ்த்துகள்... மத்திய அரசுக்கு நன்றி” - அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சூரரைப் போற்று படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த படத்துக்கான விருது, சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , அபர்ணா பால முரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது, ஜி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது, சிறந்த திரைக்கதைக்கான விருது ஆகிய ஐந்து தேசிய விருதுகளை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வென்றுள்ளது.

இந்நிலையில், ‘சூரரைப் போற்று’ படக் குழுவினருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சூரரைப் போற்று திரைப்படத்தில் தனது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பிற்காகத் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் சூர்யாவுக்கு வழங்கி கௌரவித்த மத்திய அரசுக்கு நன்றி.

சூரரைப் போற்று படத்திற்குச் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அபர்ணா பால முரளிக்கு மற்றும் சிறந்த திரைக்கதைக்காகத் தேசிய விருது பெற்ற சுதா கொங்கராவுக்கும் எங்களது வாழ்த்துகள்" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE