கண்வலி கிழங்கிற்கு ஆதார விலை: மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: தமிழகத்தில் செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்கச்செய்ய தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை அடுத்து, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்ய முன்வரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.

மருத்துவக்குணம் கொண்ட பயிர்களை தமிழக விவசாயிகள் பாரம்பரியமாகவே சாகுபடி செய்து வருகின்றனர். அதில், செங்காந்தள் மலர் என அழைக்கப்படும் குளோரியோசா சூப்பர்பா. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அதிமுக்கியமான மருத்துவ பயிராக உள்ளது. இதனை கண்வலிக்கிழங்கு என்றும் அழைப்பர். செங்காந்தள் மலர் தமிழக அரசின் மாநில மலராகவும் உள்ளது.

தமிழகத்தில் கண்வலிக்கிழங்கு எனப்படும் செங்காந்தள் பயிர் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டுவருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 3,985 டன் கண்வலிக்கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவ பயன்பாட்டிற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கண்வலிக்கிழங்கு விதையில், கொல்சிஸின் எனும் மருத்துவக்குணம் கொண்ட வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால், புற்றுநோய், வாதம், வீக்கம் போன்ற நோய்க்கான மருந்து தயாரிப்பிலும், பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக்கடிக்கான மருந்துகள் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் கண்வலிக்கிழங்கிற்கு அதிக கிராக்கி உள்ளது.

வடமாநிலங்களிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இத்தகைய தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கண்வலிக்கிழங்கு விதைகளுக்கு உரிய விலையை விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி அதிக விலைக்கு விற்று வியாபாரிகள் அதிகம் லாபம் பார்ப்பதாகவும், விவசாயிளுக்கு குறைந்த அளவே லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறிவருகின்றனர்.

இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை காக்க கண்வலிக்கிழங்கிற்கு ஆதாரவிலையை நிர்ணயிக்கவேண்டும் என விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கண்வலிக்கிழங்கு விதைகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையினை நிர்ணயிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசின் வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு ஜூலை 12 ம் தேதி மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளருக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதையடுத்து ஜூலை 14 ம் தேதி பெங்களூரில் மத்திய அரசால் நடத்தப்பட்ட அனைத்து மாநில வேளாண்துறை அமைச்சர்களுக்கான கருத்தரங்கில் தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மத்திய வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சரிடம் நேரில் கண்வலிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது தொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.

கண்வலிக்கிழங்கு விவசாயிகளின் நீண்டநாள் கோரி்க்கையை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது கண்வலிக்கிழங்கு விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நெல், உளுந்து, துவரை போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது போல், தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று, தாமதம் செய்யாமல் கண்வலிக்கிழங்கு விதைகளுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையினை விரைவில் நிர்ணயிக்கவேண்டும் என விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரி்க்கைவிடுத்துள்ளனர்.

ஆதாரவிலை நிர்ணயிக்கும் பட்சத்தில், கண்வலிக்கிழங்கு விதைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளையும், தமிழக விவசாயிகளையும் ஒருங்கிணைத்து அரசின் மேற்பார்வையில் தமிழகத்தில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க வழி ஏற்படும்.

தமிழக அரசின் முன்னெடுப்பான கண்வழிக்கிழங்கிற்கு ஆதாரவிலை என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட்டு நிறைவேற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கண்வலி கிழங்கு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE