சென்னை: “ஆர்தர் காட்டனின் பிறந்தநாளான மே 15-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், அதை நீர் மேலாண்மை நாளாகவும் அறிவிக்க வேண்டும். அவருக்கு கொள்ளிடம் கீழணைப் பகுதியில் மணிமண்டமும், அருங்காட்சியகமும் அமைக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி பாசன மாவட்டங்களை வளப்படுத்துவதற்கு காரணமானவரும், தென்னிந்தியாவில் ஏராளமான பாசனத் திட்டங்களை செயல்படுத்தியவருமான சர். ஆர்தர் தாமஸ் காட்டனின் 123-ஆவது நினைவு நாள் நாளை மறுநாள் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் நீர் மேலாண்மைக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திய அவருக்கு உரிய அங்கீகாரத்தை தமிழகம் இதுவரை வழங்காதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழகம், தென்னிந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் நீர் மேலாண்மை வரலாற்றை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் சர் ஆர்தர் காட்டனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. இங்கிலாந்தில் 1803-ஆம் ஆண்டில் பிறந்த அவர், ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் உதவியாளராக சேர்ந்து, பின்னாளில் அதன் தலைமைப் பொறியாளராக உயர்ந்தார். இந்தக் காலத்தில் பொதுப்பணித்துறையிலும், நீர் மேலாண்மையிலும் அவர் படைத்த சாதனைகள் ஏராளம். அதற்காக அவருக்கு ஒட்டுமொத்த தமிழகமும் நன்றிக்கடன்பட்டுள்ளது.
கரிகால் சோழனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை ஒரு கட்டத்தில் மணல் மேடாக மாறியதால் காவிரியில் நீரோட்டம் தடைபட்டது. மழைக்காலங்களில் வெள்ளம், மற்ற நேரங்களில் வறட்சி என காவிரி டெல்டா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1830-ஆம் ஆண்டில், கல்லணையில் மணல்போக்கிகளை அமைத்து, காவிரியில் சீரான நீரோட்டத்தை உறுதி செய்தார். அதனால் தான் காவிரி டெல்டா மீண்டும் வளம் பெற்றது. காவிரியை விட கொள்ளிடம் ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதையும், அது யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பதையும் கண்ட காட்டன், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு முக்கொம்பு பகுதியில் மேலணையை கட்டினார். அதேபோல், அணைக்கரையில் கீழணையை கட்டினார். காவிரி பாசனப் பகுதி வளம் பெறுவதற்கு அவரது மேற்கண்ட 3 பணிகளும் தான் முக்கியக் காரணம்.
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு 100 ஆண்டுகள் முன்பாக 1835-ஆம் ஆண்டிலேயே அதற்கான திட்டத்தை வகுத்து அதற்கு மைசூர் சமஸ்தானத்தின் அனுமதியை பெற முயன்றார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும், பின்னாளில் அவர் வகுத்துத் தந்த திட்டப்படியே மேட்டூர் அணை கட்டப் பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்கான வரைவுத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தவரும் இவர் தான்.
» வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும்: மநீம வரவேற்பு
» கோயில்களில் களைகட்டிய ஆடி மாத திருவிழா: ஓசூர் சாமந்திப்பூவுக்கு சந்தையில் வரவேற்பு
கல்லணையின் பொறியியல் அதியசங்களைக் கண்டு வியந்த ஆர்தர் காட்டன், அதை அடிப்படையாக வைத்து ஆந்திராவின் தவுலேஸ்வரத்தில் கோதாவரியின் குறுக்கேயும், விஜயவாடாவில் கிருஷ்ணா ஆற்றிலும் அணைகளைக் கட்டி 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தினார். மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாசனத் திட்டங்களை செயல்படுத்தினார்.
இந்திய நதிகளின் இணைப்புக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவரும் இவர் தான். பாசனத் திட்டங்களைத் தாண்டி கப்பல் போக்குவரத்துக்கான பாம்பன் நீரிணை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை முதல் சென்குன்றம் வரை 1837-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தொடர்வண்டியை வடிவமைத்து இயக்கியது என தமிழ்நாட்டின் நலன்களுக்காக ஆர்தர் தாமஸ் காட்டன் செய்த பணிகளின் பட்டியல் மிக நீளமானது.
ஆனால், ஆர்தர் காட்டனின் சாதனைகளை நாம் அங்கீகரிக்கவில்லை என்பது மிகவும் வேதனையானது. ஆந்திரத்தில் அவர் செய்த சேவைகளுக்காக கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகைகளில் 3000-க்கும் கூடுதலான இடங்களில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளான மே 15-ஆம் தேதியை அம்மாநில மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கோதாவரி தவுலேஸ்வரம் அணைப் பகுதியில் அவரது சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கல்லணையில் அவருக்கு ஒரு சிறிய சிலை அமைக்கப்பட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யப்படவில்லை.
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குக்கை தமிழகம் சிறப்பாக அங்கீகரித்திருக்கிறது. அவருக்கு லோயர்கேம்ப் பகுதியில் 2006-ஆம் ஆண்டில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 15-ஆம் நாள் அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், அவரது முன்னோடியான சர். ஆர்தர் காட்டனின் பிறந்தநாளான மே 15-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், அதை நீர் மேலாண்மை நாளாகவும் அறிவிக்க வேண்டும். அவருக்கு கொள்ளிடம் கீழணைப் பகுதியில் மணிமண்டமும், அருங்காட்சியகமும் அமைக்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago