விஷம் குடித்த ஆசிரியர், மகள் உயிரிழப்பு, சிகிச்சையில் மனைவி: விஷம் கொடுக்காததால் உயிர்தப்பிய மகன்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் விஷம் குடித்த ஆசிரியரும், அவரது மகள் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் கொடுக்காததால அவர் மகன் உயிர் தப்பினார்.

கரூர் காந்திகிராமம் கிழக்கு போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முகமது பரீத் (49). இவர் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி நஸ்ரீன்பானு (39). இவர்கள் மகள் ஜுகிந்நாஜ் (16). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பி ளஸ் 1 படித்து வந்தார். மகன் தன்வீர் (9).

ஜுகினாஜ்

கரூர் போக்குவரத்து நகரில் முகமதுபரீத் புதிதாக வீடு வாங்கியதில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முகமதுபரீத் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 20) முகமது பரீத் மந்திரித்த தண்ணீர் எனக்கூறி மனைவி நஸ்ரீன்பானு, மகள் ஜூகிந்நாஜ் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவரும் அருந்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர் ஒருவருக்கு போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜுகிந்நாஜ் நேற்றிரவு உயிரிழந்தார். முகமதுபரீத், நஸ்ரீன்பானு ஆகியோரை மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் வரும் வழியிலேயே முகமதுபரீத் உயிரிழந்தார்.

நஸ்ரீன்பானு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் இன்று (ஜூலை 21) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் தன்வீருக்கு விஷம் கொடுக்காததால் அவர் உயிர்தப்பினார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE