‘‘தமிழ் சமூகத்துக்கு என்ன பயன்?’’ - தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணியால் சர்ச்சை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைந்துள்ள ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆர்.டபிள்யூ.டி.இ.ஆஷ். இவர் 1911-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில், விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஞ்சிநாதனும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்திய விடுதலை இயக்கத்தில் இந்த சம்பவம் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

ஆஷ் துரைக்கு தூத்துக்குடியில் நினைவு மண்டபம் அமைக்க 1912 ஏப்.3-ல் தூத்துக்குடி உதவி ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஏ.ஆர்.காக்ஸ் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தூத்துக்குடி டபிள்யூஜிசி சாலையும், கடற்கரை சாலையும் சந்திக்கும் பகுதியில் எட்டுத் தூண்களுடன் எண்கோண மண்டபமாக இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. 1913 ஆக.28-ல் திருநெல்வேலி தற்காலிக ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஜே.சி.மெலானி என்பவரால் இந்த நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்த நினைவு மண்டபம் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டது. முட்செடிகள் வளர்ந்து சிதிலமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்தது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் கல்வி அறக்கட்டளை ஒன்று இந்த நினைவு மண்டபத்தை சுத்தப்படுத்தி பராமரித்து வந்தது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆஷ் நினைவு மண்டபம் உட்பட தூத்துக்குடியில் உள்ள 5 புராதன கட்டிடங்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், இப்பணிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஆஷ் நமது நாட்டுக்கு எதிரி. சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொடுமைப்படுத்தியவர். அத்தகையவரின் நினைவு மண்டபத்தை அரசு சார்பில் புனரமைப்பதா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக, திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளருடன் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் புனரமைக்க அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க மாநில இணைச் செயலாளர் பி.ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தனர். ‘ஆஷ் நினைவு மண்டபத்தை புதுப்பிப்பது, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். எனவே, புதுப்பிக்கும் பணியை நிறுத்த வேண்டும்’ என அவர்கள் கோரியுள்ளனர்.

மேயர் விளக்கம்

இதுதொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தூத்துக்குடியில் ஆஷ் நினைவு மண்டபம் உட்பட 5 புராதன கட்டிடங்களில் புனரமைப்பு பணி மத்திய அரசின் ஒப்புதலோடு நடைபெறுகிறது. மாநகராட்சி சார்பில் நடைபெறும் பணி என்பதால் நானும், ஆணையரும் பார்வையிட்டோம். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. இதற்கு எதிராக சிலர் உள்நோக்கத்தோடு கருத்துகளை பரப்புகின்றனர்’’ என்றார்.

தமிழ் சமூகத்துக்கு என்ன பயன்?

வேளாளர் உயர்மட்ட கமிட்டி மற்றும் தமிழர் சமூக முன்னேற்றக் கழகம் நிறுவனரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான, திருப்பூர் ஆடிட்டர் க.மலர்விழி, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்டவர்களின் உயிர்த் தியாகத்தால் தான் நமக்கு இன்றைக்கு இந்த வாழ்வு கிடைத்துள்ளது. தில்லையாடி வள்ளியம்மையின் உயிர்த்தியாகம் தான், இந்தியாவுக்கு ஒரு தேசத் தந்தை மகாத்மா காந்தியை உருவாக்கியது. 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்படுத்தி கொடுங்கோலாட்சி செய்தவர்கள் ஆஷ் துரை வகையறாக்கள். அவர்களை நினைவுபடுத்துவதால் தமிழ் சமூகத்துக்கு என்ன லாபம்? சிறையில் வ.உ.சிதம்பரனாரை மிருகத்தைவிட மோசமாக நடத்தியவர் ஆஷ் துரை. அப்படிப்பட்ட நபரின் நினைவு மண்டபத்தை புதுப்பிப்பதால், தமிழ் சமூகத்துக்கு என்ன பலன்? தியாகிகளின் வரலாற்றை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE