மத்திய அரசு அனுமதி கிடைத்ததால் செப்.1 முதல் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புமத்திய அரசு அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் ஒரு மாதம் முன்னதாக செப்.1-ம் தேதியே நெல் கொள்முதல் தொடங்கும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மேட்டூர் அணையில் இருந்து மே 24-ம் தேதியே தண்ணீரை முதல்வர் திறந்துவிட்டார். அத்துடன், குறுவை நெல் சாகுபடியும், அறுவடையும் முன்னதாகவே தொடங்கிவிடும் என்பதால், 2022-23 ஆண்டு காரிஃப் சந்தைப்பருவ கொள்முதலை அக்.1-ம் தேதிக்கு பதிலாக, செப்.1-ம் தேதியே தொடங்கவும், அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு 2022-23 ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையையே வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துபிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 21-ம் தேதி கடிதம் எழுதினார்.

மேலும், முதல்வர் உத்தரவின்படி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நானும், துறை செயலரும் கோவையில் கடந்த ஜூன் 25-ம் தேதி சந்தித்தோம். பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் நகலை அவரிடம் கொடுத்து, செப்.1-ம் தேதி கொள்முதலை தொடங்க அனுமதி வழங்க வலியுறுத்தினோம். டெல்லியில் கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்த மாநிலஉணவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டின்போதும், அமைச்சரிடம் இதுபற்றி நினைவூட்டினோம்.

குறுவைப் பருவ நெல் கொள்முதல் தொடர்பாக காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்கவும், நெல் கொள்முதலுக்கான ஆயத்தப் பணிகளை உடனே மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஜூலை 12, 13-ம் தேதிகளில்மக்கள் பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசித்ததுடன், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

அதன் அடிப்படையில், நெல் கொள்முதலுக்கு தேவையான பணியாளர்கள் தேர்வு, கொள்முதல் நிலையங்கள், நெல் சேமிப்புக்கான இடங்கள், கொள்முதலுக்கான சாக்குகள், கருவிகள் ஆகியவற்றுக்கான திட்டமிடல் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2022-23 ஆண்டு கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக செப்.1-ம் தேதி தொடங்க அனுமதித்த மத்திய அரசின் கடிதம் ஜூலை 19-ம் தேதி கிடைத்துள்ளது. இதனால், நெல் கொள்முதலுக்கான பணிகளை செப்.1-ம் தேதி முதல் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர், முதல்வருக்கு நன்றி

ஒரு மாதம் முன்னதாக, செப்.1-ம்தேதியே நெல் கொள்முதலை தொடங்கபிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வருக்கும், அனுமதி வழங்கிய பிரதமருக்கும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செப்.1-ம் தேதி நெல் கொள்முதல் செய்யப்படும்போது, விவசாயிகளுக்கு ஒரு குவின்டால் பொது ரக நெல்லுக்கு ரூ.2,115, சன்னரக நெல்லுக்கு ரூ.2,160 கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE