சின்னசேலம் பள்ளியின் மீட்புப் பணிக்கான ஒருங்கிணைப்பாளர் நியமனம்: 10, 11, 12-ம் வகுப்புகளை முதலில் நடத்த திட்டம்

By செய்திப்பிரிவு

சின்னசேலம் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்தால், சூறையாடப்பட்ட பள்ளி மீட்புக்கான ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு செயல்படுவார் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி மதி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். மாணவி கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடந்தன.

அதைத் தொடர்ந்து அந்த தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடந்த வன்முறை சம்பவத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டு, வாகனங்கள் எரிக்கப்பட்டன.

வகுப்பறைகள் இருக்கைகளுக்கும் தீ வைக்கப்பட்டன. கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த பெரும் கலவரத்தால் பள்ளி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இப்பள்ளியில் 3,800 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதற்கிடையே, பள்ளியை விரைவாக மீட்டெடுத்து மீண்டும் வகுப்புகளை தொடங்குதல் உட்பட பல்வேறு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது. இதில் வருவாய்த்துறையுடன் இணைந்து செயல்பட ஆத்தூர் மாவட்டக்கல்வி அதிகாரி ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறிய தாவது:

சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவர்கள் அதே பள்ளியில் படிப்பை தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி முதல்கட்டமாக 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் அதே பள்ளி அல்லது அருகே உள்ள வேறு கட்டிடத்தில் விரைந்து பாடங்களை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர மாணவர்களின் சான்றிதழ்கள் உடனே கிடைக்கவும் விரைவில் வருவாய்த்துறை உடன் இணைந்து சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இதுதொடர்பான பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, ஆத்தூர் மாவட்டக்கல்வி அதிகாரி ராஜு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, சுமூக நிலை எட்டப்படும் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE