கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வாட்ஸ்அப் குழு மூலம் போராட அழைப்பு: சேலம் ரயில் நிலையத்தில் போலீஸ் குவிப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வாட்ஸ்அப் குழு மூலம் போராட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சேலம் ரயில்வே ஜங்ஷனில் போராட்டம் நடத்த வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக அழைப்பு விடுத்த மாணவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தை தொடர்ந்து, மெட்ரிக் பள்ளியை முற்றுகையிட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இதில் பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டு, பள்ளியில் இருந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இப்போராட்டத்தை நடத்திட வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது, போலீஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பாக போராட்டம் நடத்த வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில், சேலம் அரியானூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பயின்ற வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்தது. அந்த மாணவரை ஆட்டையாம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்துக்கு, சேலம் மாநகர துணை ஆணையாளர் லாவண்யா தலைமையிலான மூன்று காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில் 150 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வரும் பயணிகள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீஸார் சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். ரயில்வே நிலையம் மற்றம் ரயில் தண்டவாள பகுதிகள், ரயில்வே பாலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE