மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஜூலை 27-ல் சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் புதிய அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “மின் கட்டண உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் வரும் 27-ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 25-ம் தேதி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ”அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து வருகின்ற 25.7.2022 அன்று கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, கீழ்கண்ட மாவட்டங்களில், நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும், கீழ்க்கண்ட நிர்வாகிகள் பெறுப்பேற்று நடத்துவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக்கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையைப் பொருத்தமட்டில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்டக் கழகங்களும் ஒன்றிணைந்து, ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக 27.7.2022 புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும்.

ஏனைய மாவட்டங்களில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE