“திமுக அரசின் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தால் தேவையற்ற குழப்பம்” - வானதி சீனிவாசன்

By க.சக்திவேல்

கோவை: "திமுக அரசின் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தால் மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது” என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உருவான தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறது. இதனால், தமிழக மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

1967 ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு என பெயர் மாற்றத் தீர்மானம், 1968 நவம்பர் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1969 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாளில்தான் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1956 நவம்பர் 1-ம் தேதி உருவான சென்னை மாகாணம்தான் இன்றைய தமிழ்நாடு.

அதே நாளில்தான் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் தனி மாநிலங்களாக பிரிந்தது. எனவேதான், இந்த மாநிலங்கள் நவம்பர் 1-ம் தேதியை தங்களது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. குழந்தை பிறந்த தினத்தைத்தான், பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். குழந்தைக்குப் பெயர் வைத்த நாளை உலகில் யாரும் கொண்டாடுவதில்லை.

தமிழ்நாடு தினத்தை திமுக அரசு மாற்றினால், ஆட்சி மாறும்போது மீண்டும் மாறும். அதனால் தேவையற்ற குழப்பம்தான் மிஞ்சும். இந்திய நாட்டின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க நவம்பர் 1 தமிழ்நாடு தினம், ஜூலை 18 தமிழ்நாடு தீர்மான நாள் என இரு நாட்களிலும் உறுதியேற்போம்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE