“மத்திய அரசைக் காரணம் காட்டி மின் கட்டணத்தை உயர்த்தினால்...” - முத்தரசன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: “மத்திய அரசைக் காரணம் காட்டி மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துவது மக்கள் உணர்வில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் மின்துறை அமைச்சர் வீட்டு உபயோக மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து வகை மின் கட்டணங்களையும் உயர்த்தி அறிவித்துள்ளார். உயர்த்தப்படும் மின் கட்டணத்திற்கு ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை காரணம் காட்டியுள்ளார். தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு ஒன்றிய அரசு 28 முறைக்கும் மேலாக கடிதம் எழுதியுள்ள தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசு, அண்மையில் மருந்து விலைகளை உயர்த்தியதுடன் தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிக்கத் தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்தத் தொடர் விலை ஏற்ற நடவடிக்கைகளின் விளைவாக அனைத்து அத்தியாவசிய உணவு பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.

அடித்தட்டு மக்களின் கைகளுக்கு சில உணவுப் பொருட்களும், மருந்துகளும் எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசைக் காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்துவது மக்கள் உணர்வில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காலத்தில், தமிழக அரசு கடன் வாங்கும் அளவை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்த போது, ஒன்றிய அரசின் மின் கட்டணக் கொள்கையை ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்ததை மக்கள் மறந்து விடவில்லை.

இந்தச் சூழலில் மின் கட்டணங்கள் உயர்த்தும் திட்டத்தை நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE