மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஜூலை 25-ல் தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 25-ம் தேதி திங்கட்கிழமையன்று, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி. திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களை காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து, வாய்ச் சவாடல் வீரர்களாகத் திரியும் திமுக அரசின் ஆட்சியாளர்கள், மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குப் போடுவதையும், மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை "இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வன வாசம்" என்று காராகிருஹத்திற்குள் அடைக்கும் செயல் ஒன்றையே கண்ணும் கருத்துமாக செய்து வரும் இந்த திமுக அரசு மக்களைக் காக்கும் கடைமையில் இருந்து தவறுகிறது.

2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்யும்போது, வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது உட்பட மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றின் இமாலய விலை உயர்வுகளால் பரிதவிக்கும் அப்பாவி மக்களை, இந்தக் கொடுங்கோல் ஆட்சியின் கொடூரக் கரங்களில் இருந்து காப்பாற்றும் வகையில், அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையைப் பொறுத்தமட்டில் ஒருங்கிணைந்த சென்னை மாநகரிலும் 25.07.2022 திங்கட்கிழமையன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் நலனை முன்வைத்து, கட்சியின் அமைப்பு மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மக்களின் அவலங்களைக் கேட்காத கேளா காதினராய் இருக்கும் இந்த ஆட்சியாளர்களின் செவிகளில் சென்று அடையும் வகையில், தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்