கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்பி பணியிட மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று முன்தினம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர்.

இதில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்களை கொளுத்தப்பட்டன. 3,000 மாணவர்களின் டி.சி உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து தீக்கிரை ஆகின. இது தொடர்பாக 200-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் இன்று காலை ஆலோசனை நடத்தினார். மேலும், கலவரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால், பெற்றோர் இல்லாமல் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அங்கு புதிய ஆட்சியராக ஷ்வரன் குமார் ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வக் குமாரை பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE