‘பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிட பரிசீலனையில் 100+ வெளிமாநிலத்தவர்’ - அன்புமணி அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: “1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே என அரசு அறிவித்தும் இன்று வரை செயல்வடிவம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 27.11.2019ம் நாளில் வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 8 - 13 தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றோருக்கு இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1060 பணியிடங்களை நிரப்ப 2148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குஜராத், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்களில் குறைந்தது 50 பேருக்காவது விரிவுரையாளர் பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்கவிருந்த ஆசிரியர் பணி பறிக்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும் அரசு கல்வி நிறுவனங்கள், மின்வாரியம் உள்ளிட்ட தமிழக அரசு பொதுத்துறை பணிகளில் அதிக எண்ணிக்கையிலான வெளி மாநிலத்தவர் சேர்ந்தனர். அதைக் கட்டுப்படுத்த வேன்டும் என்று பாமக வலியுறுத்தியது. அதனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களுக்கு மட்டுமே தமிழக அரசு வேலை என்ற முழக்கம் ஒலித்தது. தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் ஆள் தேர்வுகளில், தமிழர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்வை கட்டாயமாக்கி கடந்த டிசம்பர் 3ம் நாள் அரசாணை வெளியிடப்பட்டது.

அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் பணி நியமனங்களுக்கும் தமிழ் தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டிருந்தால் இந்த சிக்கல் எழுந்திருக்காது. பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை 2019ம் ஆண்டே வெளியிடப்பட்டிருந்தது என்றாலும் கூட, கடந்த ஆண்டு தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக, அரசாணை வெளியிட்டு, அதில் 2019ம் ஆண்டு அறிவிக்கைக்கும் இது பொருந்தும் என்று அறிவித்திருக்கலாம்.

அவ்வாறு செய்திருந்தால் வெளிமாநிலத்தவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றிருக்க முடியாது. ஆனால், அவ்வாறு செய்ய அரசு தவறியதன் காரணமாகத் தான் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழக அரசுப் பணியில் சேருவதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட வேண்டும். அப்போது ஆசிரியர், காவலர்கள் மற்றும் மருத்துவப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சேரும் நிலை உருவாகி விடக்கூடும்.

ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தேர்வு முகமைகளை பொருத்தவரையில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்படும் என்று கடந்த டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன் பின் 8 மாதங்களாகியும் அரசாணைகள் பிறப்பிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி என்ற நிலையை உருவாக்கத் தேவையான அரசாணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்