மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் இன்றி காப்பீட்டு திட்டம்: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித ஆவணங்களும் இன்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் பல வருடங்களாக இருக்கும் 311 ஆண்கள் மற்றும் 209 பெண்கள் என்று மொத்தம் 500 பேருக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இருந்த காரணத்தால் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய முடியாமல் இருந்தது

தற்பொழுது பல ஆலோசனைக்கு பிறகு கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இருக்கும் மனநல நோயாளிகளும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

குடும்ப அடையாள அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணமும் இல்லாமல் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE