கல்லூரி, பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை: சென்னை காவல்துறை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: கல்லூரி, பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் நேற்று கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடியதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று அவர்களை கலைந்து செல்லும் படி அறிவுறுத்தினர். இந்நிலையில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கோடை விடுமுறைக்குப் பின்னர் சென்னை பெருநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி 18ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கீழ்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள் திரளாக சாலையில் நடந்து சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், மாணவர்களை கலைந்து செல்லும்படியும், கல்லூரிக்குள் விரைந்து செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைத்தனர்.

கல்லூரிக்கு சற்று தொலைவில் நடந்து சென்ற மாணவர்களை அவ்வழியே வந்த பேருந்தில் ஏற்றி கல்லூரிக்கு செல்லும்படி அனுப்பி வைத்தனர். இதனால் எந்தவித அசம்பாவித சம்பவமும், ரகளையும் நடைபெறவில்லை. மேலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்தது.

எனினும், இக்கல்லூரிக்கு வெளியே காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும், காவல் ஆளுநர்கள் பணியமர்த்தப்பட்டும் கண்காணித்து வருகின்றனர். இதே போல, அனைத்து கல்லூரிகளுக்கும் பேருந்து வழித்தடங்களிலும் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் யாரேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கல்வியில் தங்களது முழுக்கவனத்தை செலுத்தி, நன்கு படித்து, வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE