வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் பணிமனை இடையே விடுபட்ட கட்டுமான பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் பணிமனை இடையே 9 மெட்ரோ நிலையங்களில், விடுபட்ட கட்டுமான பணிகளை வரும் டிசம்பருக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக, புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட நீட்டிப்பு திட்டத்தில், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் பணிமனை (9.051 கி.மீ.)இடையே, கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள தியாகராயா கல்லுாரி, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி , விம்கோ நகர், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையங்களில், நான்கு நுழைவு வாயில்களில் இரண்டு நுழைவு வாயில் பணிகள் முடிந்த நிலையிலேயே ரயில் சேவை தொடங்கப்பட்டது.

கரோனா தாக்கம்

பயணிகள் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க திட்டமிருந்தநிலையில், கரோனா தாக்கம், வேலை ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால், இந்தப் பணிகள் மெதுவாக நடந்தன.

முந்தைய ஒப்பந்த நிறுவனம், தங்கள் பணிகளை முடித்து, ஒதுங்கியது. இதனால், 9 ரயில் நிலையங்களிலும், அறைகள் பிரிக்கும் பணிகள், தரையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள், பயணிகளின் கூடுதல் வசதிக்கான கட்டுமான பணிகள், வாகன நிறுத்த கட்டுமான பணிகள் பாதியில் நின்றன.

புதிய ஒப்பந்ததாரர் நியமனம்

இவற்றை விரைந்து முடிக்கும் விதமாக, புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வரும் டிசம்பருக்குள் மீதமுள்ள பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE