‘வீடியோ பதிவுடன் மறு பிரேத பரிசோதனை’ - கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

மாணவி உடலில் காயங்கள் இருப்பதாகவும், தங்கள் மகளை கொலை செய்துள்ளதாகவும் கூறி பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், மாணவி உயிரிழப்புக்கு முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை, கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாணவியின் உடலை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு 49-வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா? போராட்டம் நடத்த அனுமதியளித்தது யார்? சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் நீதிமன்றம் எதற்கு? மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளீர்கள். வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும்.

அந்தப் பள்ளியில் படிக்கும் 4,500 மாணவர்களின் நிலை என்ன? அவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது கோபத்தில் நடந்த வன்முறையாக தெரியவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும், அமைதிப்பூங்கா என்ற பெயர் எடுத்த தமிழகத்தில் அந்த நம்பிக்கையை குலைத்து விட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, "மாணவியின் பெற்றோர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் அப் குழு மூலம் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்” என விளக்கமளித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ஏற்கெனவே வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. உடற்கூராய்வுக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குனர் சாந்தகுமாரி அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டார்.

இந்த மறு பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவியின் தந்தை வழக்கறிஞருடன் இதில் கலந்து கொள்ளவும் அனுமதித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர் பேட்டிகள் கொடுக்க கூடாது. ஊடக விசாரணை மேற்கொள்ள கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மறு பிரேத பரிசோதனைக்கு பின், வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்பு படையை உருவாக்க டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை குறித்து ஜூலை 29-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் இதுபோன்ற இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், குறைந்தது மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்