சென்னை: "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்றுவரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே போயிருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: "எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவும் இல்லை. தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓர் ஆற்றல் பிறக்கிறது. நேரடியாக இந்த விழாவில் வந்து கலந்துகொள்ள முடியவில்லையே என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் இரண்டு மூன்று நாட்களாக, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நான், இன்று காலையில்தான் இல்லம் திரும்பினேன். தொற்று என்பது முழுமையாக நீங்கிவிட்டாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரண காய்ச்சலாக இருந்தால் அது குணமான பின் நமது பணிகளை தொடங்கிவிடலாம். கரோனா தொற்று என்பதால், அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க, நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும், சில நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். இதனால், விழாவில் நேரடியாக பங்கேற்பது இயலாத ஒன்றாகிவிட்டது.
தமிழ்நாடு நாளில் பேசுவது என்பது எனக்கு கிடைத்த பெருமை. காணொலி மூலம் பேசுவதால், எனது உடல் சோர்வு நீங்கிவிட்டதாகவே நான் உணருகிறேன். திமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. திமுக என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்றுவரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே போயிருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் போல, இதுவும் சென்னைப் பிரதேசம் என்ற பெயரில் அடையாளமற்ற மாநிலமாகத்தான் இன்றுவரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். திராவிடம் என்ன கிழித்தது என்று வாய்கிழிய பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதை விட வேறு சாதனை தேவையா? தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததை விட வேறு சாதனை தேவையா?
உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால் அது தமிழ் இனம். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு, தாய்நாடு.
உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்குதான். நம்மை சிலர் கிண்டல் செய்வார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நாம் எதை சொன்னாலும் ஆய்வுபூர்வமாகத்தான சொல்கிறோம். சிலரைப் போல கற்பனையாக எதையும் சொல்லவில்லை. தாழ்ந்து கிடந்த தமிழினத்தை தலைநிமிரச் செய்த நாள்தான் இந்த ஜூலை 18. தமிழ்நாடு என்ற பெயர் பலரது தியாகத்தால் கிடைத்தது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு. தோல்பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு. இரண்டு நாட்களாக முன் வெளிவந்த மத்திய அரசு அறிவிப்பில், இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுனங்களில் பெரும்பாலனவை தமிழகத்தில்தான் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 சிறந்த கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழகத்தில் இருப்பவை. இந்தியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் 21 தமிழகத்தைச் சேர்ந்தவை. 50 சிறந்த மருந்தியல் கல்லூரிகளில் 11 தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் 18 தமிழகத்தில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் 16 தமிழகத்தைச் சேர்ந்தவை . இந்தியாவில் மூன்றாவது சிறந்த கலைக்கல்லூரி சென்னை மாநிலக் கல்லூரிதான். சென்னை மாநிலமாக இருந்து தமிழ்நாடாக மாறியதால் தமிழ்நாடாக மாற்றப்பட்டதால் விளைந்த பயன்கள் இவை" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago